Home இந்தியா இந்தியாவில் ஒரே நாளில் 117,100 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் ஒரே நாளில் 117,100 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் நுழைந்தபின்னர், கொரோனா பரவல் வேகம் எடுக்க ஆரம்பித்தது. கடந்த 5 நாட்களாக தினமும் பல்லாயிரக்கணக்கானோருக்கு பாதிப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது. நேற்று முன்தினம் 58 ஆயிரத்து 97 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில் நேற்று அதிரடியாக கிட்டத்தட்ட 91 ஆயிரம் பேருக்கு (சரியாக 90 ஆயிரத்து 928) கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது.
இந்நிலையில் நாட்டில் இன்று புதிதாக 117,100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 28 சதவீதம் அதிகமாகும், (இதில் மராட்டிய மாநிலத்தில் மட்டும் 36,265 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்).
இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சத்து 17 ஆயிரத்து 100 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,52,26,386 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 302 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,83,178 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 30,836 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,43,71,845 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு 3,71,363 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,49,66,81,156 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 94,47,056 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 15,13,377 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 68,68,19,128 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version