Home Hot News மூன்று மாநிலங்களில் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியிருப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது

மூன்று மாநிலங்களில் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியிருப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது

கோலாலம்பூர், ஜனவரி 8 :

இன்று மாலை நிலவரப்படி, மூன்று மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, வெள்ள நிவாரண மையங்களில் தங்கியிருப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளதால் பாதிக்கப்பட்ட பல மாநிலங்களில் வெள்ள நிலைமை சீரடைந்து வருகிறது.

ஜோகூரில், மாநில சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் ஆர். வித்யானந்தன், மாலை 4 மணி நிலவரப்படி 50 நிவாரண மையங்களில் 1,069 குடும்பங்களைச் சேர்ந்த 3,770 பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ளதாகவும், இது இன்று காலையில் 1,090 குடும்பங்களில் இருந்து 3,872 பேராக இருந்தது என்று கூறினார்.

நான்கு மாவட்டங்கள் இன்னும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், செகாமாட் மாவட்டத்தினரே அதிகபட்சமாக (1,809) பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதைத் தொடர்ந்து மூவார் (1,182), தங்காக் (705) மற்றும் பத்து பகாட் (74) எனவும் அவர் கூறினார்.

“ஆறு நிவாரண மையங்கள் இன்று மூடப்பட்டன, அவற்றில் நான்கு செகாமாட்டிலும் உள்ளவை என்று ஒரு அறிக்கைவாயிலாக இன்று தெரிவித்தார்.

மேலும் அங்குள்ள செகாமாட், மூவார் மற்றும் மெர்சிங் ஆகிய மாவட்டங்களிலுள்ள ஐந்து ஆறுகளில் நீர்மட்டம் இன்னும் ஆபத்தான நிலையில் இருப்பதால் அனைத்து குடியிருப்பாளர்களும் விழிப்புடன் இருக்குமாறு அவர் நினைவூட்டினார்.

மலாக்கா மாநிலத்தில் மலேசிய குடிமைத் தற்காப்புப் படையின் (APM) இயக்குநர் லெப்டினன்ட் கர்னல் (PA) Cutbert John Martin Quadra கூறுகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 105 குடும்பங்களை சேர்ந்த 389 பேர் தங்கியிருந்த நிலையில், இன்று பிற்பகல் 99 குடும்பங்களைச் சேர்ந்த 369 பேராகக் குறைந்துள்ளது என்றார். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஜாசினில் உள்ள 3 வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பகாங்கில், இன்று மாலை 4 மணி நிலவரப்படி, 10 வெள்ள நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 364 ஆகக் குறைந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் தெரிவித்துள்ளது. இது இன்று காலை 11 வெள்ள நிவாரண மையங்களில் 493 பேராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் இன்று நண்பகல் நிலவரப்படி, மாரானில் உள்ள சுங்கை குண்டாங் பாலத்தில் சுங்கை குண்டாங்கிலும், கம்போங் பெருவாஸில் உள்ள சுங்கை டோங் (ரவூப்) மற்றும் தாமான் அக்ரோபாலிட்டன் கெமோய் (பெந்தோங்) இல் உள்ள சுங்கை ட்ரையாங்கிலும் நீர்மட்டம் எச்சரிக்கை அளவை விட அதிகமாக உள்ளது என்று publicinfobanjir.water.gov.my இணையதளம் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version