Home உலகம் கஜகஸ்தானில் ஏற்பட்ட கலவரத்தில் ஒரே நாளில் 160க்கும் மேற்பட்டோர் பலி; 6000க்கும் அதிகமானோர் கைது!

கஜகஸ்தானில் ஏற்பட்ட கலவரத்தில் ஒரே நாளில் 160க்கும் மேற்பட்டோர் பலி; 6000க்கும் அதிகமானோர் கைது!

கஜகஸ்தான் நாட்டில் ஏற்பட்டுள்ள கலவரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் 160 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 6000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய ஆசியாவிலேயே மிகப் பெரிய நாடு கஜகஸ்தான்தான். ஒரு காலத்தில் சோவியத் யூனியனுடன் இணைந்திருந்தது. பெட்ரோலியப் பொருட்கள்தான் இந்த நாட்டின் மிகப் பெரிய வளமே. அதை வைத்துத்தான் தற்போது அங்கு பெரும் கலவரம் வெடித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக அங்கு கலவரம் தலைவிரித்தாடுகிறது.

கலவரத்தை அடக்க கண்டவுடன் சுடும் உத்தரவை அந்த நாட்டு அதிபர் பிறப்பித்துள்ளார். இதனால் ராணுவம், தெருவில் யாரைக் கண்டாலும் சுட்டுத் தள்ளுகிறது. நேற்று ஒரே நாளில் 160க்கும் மேற்பட்டோரை சுட்டுக் கொன்றுள்ளது. ராணுவம். தலைநகர் அலமாத்தியில் மட்டும் 103 பேர் கொல்லப்பட்டனர். அலமாத்தியில்தான் கலவரம் அதிகமாக உள்ளது.

6000க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். பெரும்பாலானவர்கள் வெளிநாட்டுக்காரர்கள் என அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. நிலைமை குறித்து அதிபர் கஸ்யம் ஜோம்ராட் டோகேயேவ் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. அமைதி ஏற்படும் வரை ராணுவ நடவடிக்கை தொடரும் என்றும் அதிபர் டோகேயேவ் தெரிவித்துள்ளார்.

தலைகர் அலமாத்தி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பெட்ரோலியப் பொருட்களின் விலை திடீரென உயர்த்தப்பட்டது. இதுதான் கலவரம் வெடிக்க முக்கியக் காரணம்.

மக்கள் தெருக்களில் திரண்டு அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர். இது பின்னர் வன்முறையாக மாறி, கலவரமாக வெடித்து விட்டது. இன்று நாடே பற்றி எரிந்து கொண்டுள்ளது. நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவை சூறையாடப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ரஷ்ய ராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது. கஜகஸ்தான் ராணுவத்துடன் இணைந்து ரஷ்ய ராணுவமும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

ஆனால் இதை அமெரிக்கா எதிர்த்துள்ளது. ரஷ்ய ராணுவம், கஜகஸ்தானுக்குள் புகுந்திருப்பது தவறானது, அபாயகரமானது, இது எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பிளிங்கன் கூறியுள்ளார். ஆனால் இதை கஜகஸ்தான் நிராகரித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version