Home மலேசியா குழந்தை பராமரிப்பு மையங்களில், கடந்தாண்டு 217 துஷ்பிரயோக வழக்குகள் பதிவு

குழந்தை பராமரிப்பு மையங்களில், கடந்தாண்டு 217 துஷ்பிரயோக வழக்குகள் பதிவு

கோத்தா பாரு, ஜனவரி 30 :

கடந்தாண்டு நாடு முழுவதுமுள்ள குழந்தை பராமரிப்பு மையங்களில், குழந்தைகள் சம்பந்தப்பட்ட 217 துஷ்பிரயோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ சித்தி ஜைலா முகமட் யூசாஃப் தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணிக்கை கடந்தாண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் சமூக நலத் துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

217 துஷ்பிரயோக வழக்குகளும் குழந்தை பராமரிப்பாளர்களின் பராமரிப்பில் இருந்த குழந்தைகள் சம்பந்தப்பட்டது என்று அவர் கூறினார்.

“அதே காலகட்டத்தில், 51 குழந்தை பராமரிப்பு மையங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன, மேலும் 19 மையங்களுக்கு எதிராக வாய்மொழியாக எச்சரிக்கைகள் வழங்கப்பட்டன.

“கடந்த ஆண்டு எந்த பராமரிப்பு மையம் மீதும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.

இன்று குழந்தை பராமரிப்பு மையம் நடத்துநர்களுக்கான சுகாதார மற்றும் பாதுகாப்பு பயிற்சியை தொடங்கி வைக்கும் போது சித்தி இவ்வாறு கூறினார்.

கோத்தா பாரு மற்றும் பாசீர் மாஸைச் சேர்ந்த 90க்கும் மேற்பட்ட நடத்துநர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மாநில நலன், குடும்பம் மற்றும் பெண்கள் மேம்பாட்டுக் குழுத் தலைவர் டத்தோ மும்தாஜ் முகமட் நவி மற்றும் மாநில நலன்புரி இயக்குநர் சைட் சிதுப் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை, இந்த ஆண்டு ஏற்பாடு செய்த முதல் மாநிலம் கிளாந்தான் என்று சித்தி ஜைலா கூறினார்.

“இந்த கற்கையில் கலந்துகொள்வதன் மூலம், நாட்டில் உள்ள குழந்தை பராமரிப்பு மையங்களில் பாதுகாப்பு மற்றும் சுகாதார அம்சங்கள் மேம்படும் என்று நம்புகிறேன்.

“குற்றச் செயல்பாடு இல்லாத தொழிலாளர்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும் என்று குழந்தை பராமரிப்பு மையங்களை நடத்துபவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

“மையங்களில் பணியமர்த்துவதற்கு முன் அவர்கள் முதலில், அவர்களின் பின்னணியைச் சரிபார்க்கலாம். இது குழந்தைகள் பராமரிப்பாளர்களால் துஷ்பிரயோகம் செய்வது போன்ற விரும்பத்தகாத சம்பவங்களைத் தடுக்கும்” என்று அவர் மேலும் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version