Home Hot News கடல்சார் போலீசாரிடமிருந்து தப்பிக்க, 30 கிலோ கஞ்சாவை கடலில் எறிந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள்

கடல்சார் போலீசாரிடமிருந்து தப்பிக்க, 30 கிலோ கஞ்சாவை கடலில் எறிந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள்

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 4 :

வியாழன் (பிப்ரவரி 3)அன்று, கோல பெர்லிஸ் கடல் பகுதியில் மலேசிய கடல்சார் அமலாக்க போலீசார் (MMEA) பின்தொடர்ந்து வருவதை உணர்ந்த, இரண்டு சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் RM150,000 மதிப்புள்ள 30 கிலோ கஞ்சாவை கடலில் எறிந்தனர்.

அதிகாலை 1.42 மணியளவில் நடந்த சம்பவத்தில், கோல பெர்லிஸுக்கு வடமேற்கே 2.26 கடல் மைல் தொலைவில், தாய்லாந்து கடல் பகுதியில் இருந்து வருவதாக நம்பப்படும், பதிவு எண் இல்லாத படகை ஒரு MMEA ரோந்துக் குழுவினர் கண்டறிந்தனர்.

“சோதனைக்காக படகை நிறுத்த உத்தரவிட்ட மலேசிய கடல்சார் பணியாளர்களை பார்த்ததும், சந்தேக நபர்கள் வேகமாகச் செல்வதற்கு முன், ஒரு கருப்பு பொட்டலத்தை கடலில் வீசினார்கள் ” என்று கெடா மற்றும் பெர்லிஸ் கடல்சார் இயக்குநர், முதல் அட்மிரல் முகமட் ஜவாவி அப்துல்லா கூறினார்.

மேலும் அந்தப் படகில் இருந்த சந்தேக நபர்கள் இருவரும் மலேசியர்கள் என நம்பப்படுகிறது.

“தமது படையினர் அந்த சந்தேக நபர்களை துரத்திச் சென்றனர், ஆனால் கோலா பெர்லிஸிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலேசியா-தாய்லாந்து எல்லையிலிருந்து, இரண்டு சந்தேக நபர்களும் தாய்லாந்து கடற்பகுதியில் தப்பி ஓடிவிட்டனர்” என்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

வீசிய அந்தக் கருப்புப் பொட்டலத்தில் 30 பதப்படுத்தப்பட்ட கஞ்சா கட்டிகள் இருந்ததாகவும், அது மொத்தம் 30 கிலோ என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் முகமட் ஜவாவி கூறினார்.

“கஞ்சாவை பண்டமாற்றுப் பொருளாகப் பயன்படுத்தியிருப்பதற்கான வாய்ப்பை நாங்கள் நிராகரிக்கவில்லை, அதற்கு ஈடாக மலேசியாவில் இருந்து கெத்தும் இலைகளை பரிமாறியிருக்க வாய்ப்புள்ளது.

“மேலும் மலேசியா-தாய்லாந்து கடல் எல்லையைச் சுற்றி இப் பரிமாற்ற செயல்முறை நடைபெறுவதாக நம்பப்படுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

இந்தக் கஞ்சா பெர்லிஸ், கெடா மற்றும் பினாங்குக்கு கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது என்று முகமட் ஜவாவி கூறினார்.

“பயன்படுத்தப்பட்ட படகில் 500 கிலோ கஞ்சாவை கொண்டு செல்ல முடியும் என்பதால், சந்தேக நபர்கள் அதிகமாக எடுத்துச் சென்றுள்ளனர் என்றும் நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா,போதைப்பொருள் விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்க கோல பெர்லிஸ் கடல் மண்டல அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 பிரிவு 39(பி)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version