Home உலகம் பிரேசிலில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 78 ஆக உயர்வு!

பிரேசிலில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 78 ஆக உயர்வு!

பிரேசிலியா, பிப்ரவரி 17:

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் நேற்று முன்தினம் இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது. 30 நாட்கள் பெய்ய வேண்டிய மழை வெறும் 3 மணி நேரத்தில் பெய்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். இப்படி ஒரே நாளில் கொட்டித்தீர்த்த பேய் மழையால் மாகாணத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குறிப்பாக இந்த கனமழையால் அங்குள்ள மலைபிரதேசமான பெட்ரோபோலிஸ் பிராந்தியம் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. தொடர் கனமழையால் அங்குள்ள பல்வேறு நகரங்களில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. மேலும் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

நூற்றுக்கணக்கான கால்நடைகளும் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டன. அதே போல் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமாகின. இதனிடையே கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக பெட்ரோபோலிஸ் பிராந்தியத்தின் பல இடங்களில் பயங்கரமான நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன.

இதை தொடர்ந்து வெள்ளம், நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

இதுவரையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 78 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதனிடையே ரஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனரோ, ரியோ டி ஜெனிரோ மழை பாதிப்பு குறித்து டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் “பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கடவுள் ஆறுதல் அளிக்கட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக வழங்குமாறு மந்திரிகள் மற்றும் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version