Home உலகம் 11ஆவது நாளாக தொடரும் தாக்குதல்கள்; நான்கு லட்சம் பேரை பிணைக் கைதிகளாக பிடித்த ரஷ்யா

11ஆவது நாளாக தொடரும் தாக்குதல்கள்; நான்கு லட்சம் பேரை பிணைக் கைதிகளாக பிடித்த ரஷ்யா

கீவ், மார்ச் 6:

போர் நிறுத்தத்தை மீறி ரஷ்யா தொடர்ந்தும் தாக்குதல் நடத்துவதாகவும், நான்கு லட்சம் பேரை ரஷ்ய படையினர் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர் என்றும் உக்ரைனின் மரியுபோல் நகர மேயர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்குமிடையிலான பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், இரு நாடுகளுக்குமிடையிலான முறுகல் நிலை தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், உக்ரைனின் மரியுபோல் மற்றும் வோல்னோவாகா நகரங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு வசதியாக ரஷ்யா தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தது.

எனினும், போர் நிறுத்தத்தை ரஷ்ய படைகள் மீறுவதாகவும், மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்கள் வெளியேறுவதற்கான பாதுகாப்பு பாதை அமைப்பது மறுக்கப் படுவதாகவும் மரியுபோல் நகர மேயர் வாடிம் பாய்சென்கோ குற்றம் சாட்டியுள்ளார்.

அந்த நகரம் முழுவதும் தண்ணீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் நான்கு லட்சம் நகரவாசிகள் ரஷ்ய படையினரால் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர் என்றும், தி கீவ் இன்டிபென்டன்ட் நாளிதழுக்கு மேயர் அளித்துள்ள பேட்டியில் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, மரியுபோல் நகர் மீது போர் நிறுத்தத்தை மீறி தொடர்ந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாகவும், இதன் காரணமாக பொதுமக்களை வெளியேற்றுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் மேயர் அலுவலக அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போர் தாக்குதல் தொடர்பாக ரஷ்யா – உக்ரைன் இடையேயான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version