Home Top Story இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபாய ராஜபக்சே 13-ஆம் தேதி விலகுகிறாரா ?

இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபாய ராஜபக்சே 13-ஆம் தேதி விலகுகிறாரா ?

கொழும்பு, ஜூலை 10 :

சுமார் 2 கோடியே 20 லட்சம் மக்கள் தொகையை கொண்ட இலங்கையில் கடந்த 70 ஆண்டுகளாக இல்லாத வகையில், பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் அத்தியாவசிய உணவு பொருட்கள் விலையேற்றம் மற்றம் பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு உள்பட பல்வேறு சூழல்களால் அந்நாட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதையடுத்து மக்கள் நடத்தி வரும் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது.

நேற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் பொருட்களை கைப்பற்றியுள்ளதுடன் அங்கேயே தங்கி வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ரணில் விக்ரமசிங்கேவின் தனிப்பட்ட இல்லத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அதற்கு முன்னதாக ரணில் அந்த வீட்டில் இருந்து பாதுகாப்பாக வெளியேறி உள்ளார். போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அங்கு பதற்றம் நீடிக்கிறது.

முன்னதாக நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில், பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே விலக வலியுறுத்தப்பட்டது.

இதேபோல் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அதிபர் பதவியில் இருந்து விலகுமாறு கோத்தபாய ராஜபக்சேவை வலியுறுத்தி சபாநாயகர் அபேவர்தன கடிதம் எழுதினார்.

அதற்கு பதில் அளித்துள்ள கோத்தபாய, எதிர்வரும் வரும் 13-ஆம் தேதி பதவி விலகுவதாக தெரிவித்துள்ளதாக அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தற்காலிக அதிபராக சபாநாயகர் அபேவர்தன செயல்பட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே, கொழும்பில் ரணில் விக்கிரமசிங்கேவின் தனிப்பட்ட இல்லம் அருகில் நடைபெற்ற போராட்டங்கள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற இலங்கையின் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் போலீஸ் அதிரடிப்படையினரால் தாக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த நான்கு ஊடகவியலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்வம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள ரணில் விக்ரமசிங்கே, இலங்கையின் ஜனநாயகத்திற்கு ஊடக சுதந்திரம் மிகவும் முக்கியமானது. வன்முறையையும் தடுப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், நிதானத்துடன் செயல்படுமாறு பாதுகாப்புப் படையினரையும் எதிர்ப்பாளர்களையும் கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version