Home உலகம் உக்ரைனில் ரஷியா மீண்டும் ஏவுகணை தாக்குதல்- குழந்தைகள் உள்பட 23 பேர் பலி

உக்ரைனில் ரஷியா மீண்டும் ஏவுகணை தாக்குதல்- குழந்தைகள் உள்பட 23 பேர் பலி

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த தொடங்கி 5 மாதங்களை கடந்துவிட்டது. ஆனால் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ரஷியாவின் மும்முனை தாக்குதலுக்கு உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் சின்னாபின்னமாகிவிட்டது. இருந்தபோதிலும் உக்ரைன் வீரர்கள் அசராமல் எதிர்த்து போரிட்டு வருவதால் இன்னும் சில நகரங்களை பிடிக்க முடியாமல் ரஷியா திணறி வருகிறது.

இந்தநிலையில், உக்ரைன் தலைநகர் கிவ்வில் இருந்து 268 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மத்திய பகுதியான வினிட்சியா நகரில் நேற்று ரஷியா தாக்குதலில் ஈடுபட்டது.

அங்குள்ள முக்கிய அரசு அலுவலக கட்டிடம் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் அந்த கட்டிடம் மட்டும் அல்லாமல் அருகில் இருந்த குடியிருப்பு கட்டிடங்களும் கடுமையாக சேதம் அடைந்தது.

இதில் கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்தது. இந்த தாக்குதலில் 3 குழந்தைகள் உள்பட 23 அப்பாவி பொதுமக்கள் இறந்தனர். 90-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அடுத்தடுத்து 8 தடவை நடந்த ஏவுகணை வீச்சில் 50-க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் வாகனங்கள் தீயில் கருகி சேதம் ஆனது. நேற்று முன்தினம் நடந்த சண்டையில் 5 பேர் இறந்தனர்.

ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். பொதுமக்கள் மீது வேண்டுமென்றே குறிவைத்து இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version