Home Top Story பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உரையை அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் நேரலையாக ஒளிபரப்ப தடை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உரையை அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் நேரலையாக ஒளிபரப்ப தடை!

இஸ்லாமாபாத், ஆகஸ்ட் 21 :

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உரையை நேரடியாக ஒளிபரப்ப பாகிஸ்தான் ஊடக அமைப்பு தடை விதித்துள்ளது.

இஸ்லாமாபாத்தில் ஒரு பொது நிகழ்ச்சியின் போது பேசிய இம்ரான் கான், இஸ்லாமாபாத் காவல்துறை அதிகாரி மற்றும் பெண் மாஜிஸ்திரேட்டை மிரட்டியதற்காக பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) தலைவர் இம்ரான் கானின் நேரடி உரைகளை ஒளிபரப்ப பாகிஸ்தானின் ஊடக ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்துள்ளது.

பாகிஸ்தான் இராணுவத்திற்கு எதிராக தொலைக்காட்சியில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாக இம்ரானின் பிடிஐ கட்சி தலைவர் ஷாபாஸ் கில் மீது, அந்நாட்டின் ஊடக அதிகார மையத்தால் அவர் பேசியது “மிகவும் வெறுக்கத்தக்க மற்றும் தேசத்துரோகம்” என்று குற்றம்சாட்டப்பட்டு, கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட இம்ரானின் பிடிஐ கட்சி தலைவர் ஷாபாஸ் கில்லுக்கு ஆதரவாக இஸ்லாமாபாத்தில் பிடிஐ கட்சி பேரணியை நடத்தியது. போலீஸ் காவலில் ஷாபாஸ் கில் கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக அக்கட்சி குற்றம்சாட்டியது. எதிர்க்கட்சிகளுக்கு ஒரு செய்தியை அனுப்பவும் மக்களை பயமுறுத்தவும் கில் பிடிபட்டு சித்திரவதை செய்யப்பட்டார் என்று இம்ரான் குற்றம் சாட்டினார்.

இம்ரான் கானின் உரையில் அவர் பேசுகையில்:- ஷாபாஸ் கில்லை சித்திரவதை செய்ததற்காக இஸ்லாமாபாத்தின் போலீஸ் ஐ.ஜி, துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் மற்றும் பெண் மாஜிஸ்திரேட் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்வோம். ஐஜியை விட்டு வைக்க மாட்டோம் என்று இம்ரான் உறுதியளித்தார்.

இதனை தொடர்ந்து, இம்ரானின் பதிவு செய்யப்பட்ட உரையை மட்டுமே ஒளிபரப்ப அனுமதிக்கப்படும் என்று பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் அனைத்து செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்களிலும் இம்ரான் கானின் நேரடி உரையை ஒளிபரப்ப உடனடியாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version