Home Top Story பண மோசடி வழக்கு: நடிகை ஜாக்குலினுக்கு டெல்லி போலீசார் மீண்டும் சம்மன்

பண மோசடி வழக்கு: நடிகை ஜாக்குலினுக்கு டெல்லி போலீசார் மீண்டும் சம்மன்

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரையும் சேர்த்துள்ளது.

மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலினுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. சுகேஷ் சந்திரசேகரின் குற்றப் பின்னணி தெரிந்து இருந்தும் அவருடன் ஜாக்குலின் பழகியதுடன் பரிசு பொருட்களை பெற்றுள்ளார் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சுகேஷ் சந்திரசேகரை நடிகை ஜாக்குலினுக்கு அறிமுகம் செய்துவைத்த பிங்கி இராணி என்பவர் பெயரும் குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றிருந்தது. இது தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடிகை ஜாக்குலின், பிங்கி இராணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பணமோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் கடந்த 14 ஆம் தேதி விசாரணைக்காக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன் ஆஜரானார். அன்று பிங்கி இராணியும் விசாரணைக்காக குற்றப்பிரிவு போலீஸ் முன் ஆஜராகியுள்ளார். சுமார் 8 மணி நேரம் ஜாக்குலினிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த விசாரணையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் பிங்கி இரானி ஆகியோரின் பதில்களில் முரண்பாடுகள் இருப்பதாக டெல்லி போலீசார் கண்டறிந்துள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கில் நடிகை ஜாக்குலின் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக டெல்லி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

ஜாக்குலின் பெர்னாண்டஸ் நாளை காலை 11:00 மணிக்கு டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் கடந்த 14 ஆம் தேதி ஆஜராவதற்கு முன்பு ஆகஸ்ட் 29-ம் தேதி, செப்டம்பர் 12-ம் தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் இரண்டு சம்மன்களுக்கும் ஜாக்குலின் ஆஜராகவில்லை. முதல் கட்ட விசாரணையின் போது, டெல்லி போலீசார் நடிகை ஜாக்குலின் மற்றும் பிங்கி இரானி பதில்களில் முரண்பாடுகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளதால் அவர்களை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக போலீசார் அழைக்கலாம் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் நடிகை ஜாக்குலினுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version