Home உலகம் நுண்ணிய புகைப்படப் போட்டியில் முதலிடம் வென்ற எறும்பின் புகைப்படம்

நுண்ணிய புகைப்படப் போட்டியில் முதலிடம் வென்ற எறும்பின் புகைப்படம்

வில்னியஸ்:

மைக்ரோஸ்கோபிக் போட்டோகிராபி எனப்படும் நுண்ணிய புகைப்படக் கலை சமீப காலமாக பிரபலமாகி வருகிறது. அதாவது சிறிய உயிரினங்களை கேமிரா கொண்டு படம்பிடித்து காட்டுவதுதான் மைக்ரோஸ்கோபிக் போட்டோகிராபி.

இந்த போட்டோகிராபி தொடர்பாக நிக்கான் நிறுவனம் நடத்திய போட்டியில் தற்போது லிதுவேனியன் புகைப்படக் கலைஞர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

அவர் அப்படி என்ன புகைப்படம் எடுத்திருக்கிறார் என்று கேட்கிறீர்களா? அவர் எறும்பின் முகத்தைதான் புகைப்படமாக எடுத்துள்ளார். இந்த போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நிக்கான் நிறுவனம் இந்த ஆண்டு நடத்திய மைக்ரோஸ்கோபிக் போட்டோகிராபி போட்டியில் எறும்பின் முகத்தை மிக அழகாக படமெடுத்த லிதுவேனியன் புகைப்படக் கலைஞருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

லிதுவேனியன் யூஜெனிஜஸ் கவாலியாஸ்காஸ்தான் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.

இந்த படத்தில் நீங்கள் பார்ப்பது ஐந்து மடங்கு பெரிதாக்கப்பட்ட எறும்பின் முகம். இதில் மனிதர்களை போலவே கண்கள், மூக்கு, கூர்மையான பற்களை கொண்ட வாய் என அனைத்தையும் தெளிவாக பார்க்க முடிகிறது. எறும்பு இவையனைத்தும் சினிமாக்களில் காட்சிப்படுத்தப்பட்ட ஏலியன்களின் உருவங்களை ஒத்து உள்ளதாக பலர் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக யூஜெனிஜஸ், “இயற்கையில் எந்த பயங்கரமும் இல்லை” என்று கூறியுள்ளார். மேலும், “நான் காட்டுப் பகுதிக்கு அருகில்தான் வசிக்கிறேன். எனவே நான் அடிக்கடி குறிப்பிட்ட காட்டு விலங்குகளையும் பார்ப்பேன். ஆனால் புகைப்படக் கலைஞர்களின் முக்கிய குறிக்கோள் படமெடுப்பது அல்ல. கண்டுபிடிப்பதுதான். அப்படி சிறப்பான கண்டுபிடிப்புகளை கொண்ட படங்களினாலும், கடவுள்களின் சிறந்த வடிவமைப்புகளாக இருக்கும் சக உயிர்களாலும் நான் ஈர்க்கப்பட்டேன்.” என்று கூறியுள்ளார்.

இவர் இதற்கு முன்னர் நிறைய வித்தியாசமான படங்களை எடுத்துள்ளார். குறிப்பாக வேட்டையாடும் பறவைகள் தொடர்பாக இவர் எடுத்துள்ள படங்கள் மிகவும் பிரபலமானவை.

இந்நிலையில் தற்போது இவர் மைக்ரோஸ்கோபிக் போட்டோகிராபி போட்டியில் பரிசு வென்றுள்ளார். கடந்த 48 ஆண்டுகளாக இந்த போட்டியை நிக்கான் நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் சுமார் 1,300 படங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனாலும் இவையெல்லாவற்றையும் விட இந்த எறும்பின் படமே முதல் பரிசை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleகனடாவில் கைத்துப்பாக்கி வாங்கவும், விற்கவும் தடை..!
Next articleஇரு சுற்றுலா பேருந்துகள் மோதியதில், மூவர் படுகாயம் மற்றும் 12 பேருக்கு லேசான காயங்கள்…

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version