Home Top Story 18 ஆண்டுகள் பாரிஸ் விமான நிலையத்திலேயே வசித்த ஈரானியர் மரணம்

18 ஆண்டுகள் பாரிஸ் விமான நிலையத்திலேயே வசித்த ஈரானியர் மரணம்

பாரிஸ், நவம்பர் 13 :

கடந்த 18 ஆண்டுகளாக பாரிஸ் விமான நிலையத்தையே தனது குடியிருப்பாக மாற்றிய ஈரானியர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானியரான மெஹ்ரான் கரிமி நசேரி என்பவர், தனது சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாத இராஜாங்க சிக்கலில் சிக்கிக்கொள்ள, 1988 முதல் பாரிஸ் நகரின் Charles de Gaulle விமான நிலையத்தின் ஒரு பகுதியில் வசித்து வந்துள்ளார்.

மேலும், இவரது நிலை அறிந்து பிரான்ஸ் நிர்வாகம், குடியிருப்பு அனுமதி வழங்கியது. ஆனால் சில வாரங்கள் முன்பு மீண்டும் அவர் விமான நிலையத்திற்கே திரும்பியுள்ளார். இந்த நிலையில், அவர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரது மரணம் இயற்கையானது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் Khuzestan பகுதியில் பிறந்த நசேரி, தமது தாயாரை கண்டுபிடிக்கும் நோக்கிலேயே முதன் முறையாக ஐரோப்பாவுக்கு வந்துள்ளார்.

பின்னர் சில காலம் பெல்ஜியத்தில் வசித்து வந்துள்ளார். ஆனால் முறையான ஆவணங்கள் ஏதுமில்லை என்ற காரணத்தால், பிரித்தானியா, நெதர்லாந்து மற்றும் ஜேர்மனியில் இருந்தும் நசேரி வெளியேற்றப்பட்டுள்ளார்.

கடைசியாக பிரான்ஸ் சென்ற அவர், விமான நிலையத்தில் 2எஃப் டெர்மினலின் ஒரு சிறிய பகுதியை தமது குடியிருப்பாக மாற்றியுள்ளார். இறுதி நாட்களில் அவர் தமது வாழ்க்கை தொடர்பில் குறிப்புகளாக எழுதி வந்துள்ளதாகவும், புத்தகங்கள் மற்றும் நாளேடுகளை வாசித்து நேரம் செலவிட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

இவரது கதையே, Stephen Spielberg இயக்கத்தில் The Terminal என்ற திரைப்படமாக வெளிவந்து பெரும் ஆதரவை பெற்றது. ஆனால் அந்த திரைப்படம் வெளியான பின்னர், பலரது கவனமும் இவர் மீது திரும்ப, ஊடகங்கள் இவரை மொய்த்துக்கொண்டது.

1999ல் இவருக்கு அகதி அந்தஸ்து அளித்து, பிரான்சில் குடியிருக்க அனுமதி வழங்கப்பட்டாலும், 2006 வரையில் பாரிஸ் விமான நிலையத்திலேயே தங்கி வந்துள்ளார். இதனிடையே நசேரி நோய்வாய்ப்பட, மருத்துவமனையில் இருந்து திரும்பிய பின்னர் விடுதி ஒன்றில் சில காலம் தங்கியுள்ளார்.

இந்த நிலையில், சில வாரங்கள் முன்பு மீண்டும் விமான நிலையத்திற்கு திரும்பிய நசேரி, இறக்கும் வரையில் தமக்கு பிடித்தமான அதே பகுதியில் வசித்து வந்துள்ளார். இறந்த பின்னர், நசேரியின் வசமிருந்து பல ஆயிரம் யூரோக்கள் கைப்பற்றியதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version