Home உலகம் MH17 விமானத்தை சுட்டு வீழ்த்திய வழக்கு- 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது நெதர்லாந்து நீதிமன்றம்

MH17 விமானத்தை சுட்டு வீழ்த்திய வழக்கு- 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது நெதர்லாந்து நீதிமன்றம்

ஆம்ஸ்டர்டாம், நவம்பர் 18 :

2014, ஜூலை மாதம் 17-ம் தேதி நெதர்லாந்திலிருந்து மலேசியாவுக்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான MH17 ரக பயணிகள் விமானம் உக்ரைன் வான்பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது.

உக்ரைன் இராணுவத்துக்கும் ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் இடையே உக்கிரமாக சண்டை நடைபெற்று வந்த போது ரஷிய எல்லைப் பகுதி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில், 15 விமான ஊழியர்கள் உள்பட விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் உயிரிழந்தனர். இந்த விமானத்தை ரஷியா ஆதரவு பிரிவினைவாதிகள் தான் சுட்டு வீழ்த்தினர் என உக்ரைன் குற்றம் சாட்டியது. ஆனால், உக்ரைன் படைகள்தான் பொறுப்பு என ரஷியாவும் பிரிவினைவாதிகளும் கூறினர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய சர்வதேச விசாரணைக்குழு தனது விசாரணை அறிக்கையில் மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக 4 பேர் மீது குற்றம் சுமத்தியது. இகோர் கிர்கின், செர்கெய் டுபின்ஸ்கி மற்றும் ஒலெக் புல்டோவ் ஆகிய மூன்று ரஷ்யர்களும், லியோனிட் கார்சென்கோ என்னும் ஓர் உக்ரைன் நாட்டவரும் விமானத்தை சுட்டு வீழ்த்தி பத்து நாடுகளைச் சேர்ந்த 298 பேரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு நெதர்லாந்து நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது ரஷியர்களான இகோர் கிர்கின் மற்றும் செர்கெய் டுபின்ஸ்கி மற்றும் உக்ரைனைச் சேர்ந்த லியோனிட் கார்சென்கோ ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் குற்றஞ்சட்டப்பட்ட நான்காவது நபர் விடுவிக்கப்பட்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version