Home உலகம் உலகக்கோப்பை கால்பந்து: அரையிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ் – வெளியேறியது இங்கிலாந்து

உலகக்கோப்பை கால்பந்து: அரையிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ் – வெளியேறியது இங்கிலாந்து

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு 12.30 மணிக்கு அல்பைட் மைதானத்தில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து – பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இங்கிலாந்து அணி லீக் சுற்றில் ஈரான், வேல்ஸ் அணிகளுக்கு எதிராக வெற்றி, அமெரிக்காவுடன் டிரா கண்டது. ரவுண்டு ஆப் 16ல் செனகலை 3-0 என வீழ்த்தி கம்பீரமாக காலிறுதிக்குள் நுழைந்துள்ளது. அதற்குக் கொஞ்சமும் குறையாத வேகத்தில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணி உள்ளது.

உலக கோப்பையில் 2 முறை கோப்பையை வென்றுள்ள பிரான்ஸ், 2006ல் 2ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. லீக் சுற்றில் ஆஸ்திரேலியா, டென்மார்க் அணிகளை வீழ்த்திய  பிரான்ஸ், கடைசி லீக் ஆட்டத்தில் துனிசியாவிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. எனினும், ரவுண்டு ஆப் 16ல் போலந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

இந்நிலையில் பரபரப்பாக இன்று துவங்கிய போட்டியின் முதல் பாதியில் பிரான்ஸ் அணி வீரர் சொளமெனி ஆட்டத்தின் 17ஆவது நிமிடத்தில் தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார். இதன்மூலம் ஆட்டத்தின் முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி முன்னிலை வகித்தது.

இதனைத்தொடர்ந்து அனல் பறந்த போட்டியின் இரண்டாவது பாதி ஆட்டத்தின் 54ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணி வீரர் ஹேரி கேன் முதல் கோலை அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். இந்த சூழலில் ஆட்டத்தின் 78ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரரான ஒலிவர் கிரெளடு தனது அணிக்கான இரண்டாவது கோலை அடித்து அணியை முன்னிலை பெறச்செய்தார்.

தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. பின்னர் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

இதன்மூலம் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version