Home Top Story பத்திரிகையாளர்களின் கணக்குகள் முடக்கம்; டுவிட்டர் நிறுவனத்துக்கு ஐ.நா. கண்டனம்

பத்திரிகையாளர்களின் கணக்குகள் முடக்கம்; டுவிட்டர் நிறுவனத்துக்கு ஐ.நா. கண்டனம்

அமெரிக்காவின் பல்வேறு செய்தி நிறுவனங்களை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்கள் பலரின் டுவிட்டர் கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு முடக்கியது.

டுவிட்டரின் புதிய தனியுரிமைக் கொள்கைகளின் ஒரு பகுதியாக, `மற்றவர்களின் நல்வாழ்வுக்கு அச்சுறுத்தல்’ என்ற அடிப்படையில் இந்த கணக்குகள் முடக்கப்பட்டதாக டுவிட்டர் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

அதேசமயம் எலான் மஸ்க்கின் ஒவ்வொரு அசைவுகளையும் ரகசியமாக கண்காணித்து அவர் குறித்து செய்திகளை வெளியிட்டு வந்ததற்காக பத்திரிகையாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பத்திரிகையாளர்களின் கணக்குகளை முடக்கியதன் மூலம் ஊடக சுதந்திரத்தை பறிப்பதாக கூறி டுவிட்டர் நிறுவனத்துக்கு ஐ.நா. மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஐ.நாவின் உலகளாவிய தகவல் தொடர்புகளுக்கான துணைப் பொதுச்செயலாளர் மெலிசா பிளவ்மிங் கூறுகையில், “டுவிட்டரில் பத்திரிகையாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டது மிகுந்த மனஉளைச்சலை அளிக்கிறது. ஊடக சுதந்திரம் என்பது பொம்மை அல்ல. சுதந்திரமான பத்திரிகை ஜனநாயக சமூகங்களின் அடித்தளம் ஆகும். மேலும் அது தீங்கு விளைவிக்கும் தவறான தகவல்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கிய கருவியாகும்” என்றார்.

ஐரோப்பிய கூட்டமைப்பின் ஆணையர் வேரா ஜூரோவா “டுவிட்டர் நிறுவனம், ஊடக சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளை மதிக்க வேண்டும். எலான் மஸ்க் அதைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். டுவிட்டர் நிறுவனம் தொடர்ந்து எல்லை மீறினால் ஐரோப்பாவின் புதிய டிஜிட்டல் சேவைகள் சட்டத்தின் கீழ் பொருளாதார தடைகள் விதிக்கப்படும்” என எச்சரித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version