Home Top Story ஈரானில் மேலும் 100 மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதால் பரபரப்பு: மக்கள் போராட்டம்

ஈரானில் மேலும் 100 மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதால் பரபரப்பு: மக்கள் போராட்டம்

ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே உள்ள கோம் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் பலர் அடுத்தடுத்து, உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்வற்றால் பாதிக்கப்பட்ட டஜன்கணக்கான மாணவிகள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவ பரிசோதனையில் மாணவிகளின் உடலில் நஞ்சு இருந்தது தெரிந்தது.

இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கடந்த மாத இறுதியில் இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய ஈரான் சுகாதாரத் துறை துணை மந்திரி யூனுஸ், மாணவிகளுக்கு வேண்டுமென்றே விஷம் கொடுக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

தொடர்கதையாகும் சம்பவம்

மாணவிகள் கல்வி பயில்வதை தடுப்பதற்காக, மத அடிப்படைவாதிகளால் விஷம் கொடுக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. மேலும் இது தொடர்பாக ஈரான் அரசு விசாரணையை தொடங்கியது. ஆனாலும் பள்ளி மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்படும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ஈரானின் 10 மாகாணங்களில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

30-க்கும் மேற்பட்ட பள்ளிகளில்..

10 மாகாணங்களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட பெண்கள் பள்ளிகளில் பயிலும் மாணவிகளை குறிவைத்து இந்த கொடூர சம்பவம் அரங்கேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். சம்பவம் நடந்த பள்ளிக்கூடங்களின் முன்பு மாணவிகளின் பெற்றோர் பதற்றத்துடன் கூடி நிற்பது மற்றும் மாணவிகளை ஆம்புலன்சுகளிஸ் ஏற்றி செல்வது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

வீதியில் இறங்கி போராட்டம்

இதனிடையே பெண்களின் கல்வி உரிமையை பறிக்கும் நோக்கில் அவர்களுக்கு விஷம் வைக்கப்படும் விவகாரத்தில் அரசுக்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்துள்ளது. தலைநகர் டெஹ்ரான் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட மாணவிகளுடன் பெற்றோருடன் பொதுமக்களும் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். குவின் வாங் கடுமையாக விமர்சனம் மேற்கு டெஹ்ரானில் உள்ள கல்வி அமைச்சகம் முன்பு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பழமைவாதிகள் மற்றும் மத அடிப்படைவாதிகளுக்கு எதிராகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

வெளிநாட்டு சதி

கடந்த ஆண்டு இறுதியில் ஹிஜாப் விவகாரத்தில் தொடர்ந்து 3 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற போராட்டம் ஈரானை ஸ்தம்பிக்க வைத்த நிலையில், தற்போது மீண்டும் அரசுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் வெடித்திருப்பது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக இந்த விவகாரம் குறித்து பேசிய ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி இது ஒரு வெளிநாட்டு சதி என்றும், இதன் மூலம் நமது எதிரிகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே அச்சத்தையும், பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்த முயல்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார். எனினும் அந்த எதிரிகள் யார் என்று அவர் கூறவில்லை. அதே சமயம் இதுபோன்ற விவகாரங்களில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலைத்தான் ஈரான் எப்போதும் குற்றம்சாட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version