Home Top Story சூடானில் இராணுவ மோதல் தீவிரம்: பலி 270 ஆக உயர்வு, 2,600 பேர் காயம்

சூடானில் இராணுவ மோதல் தீவிரம்: பலி 270 ஆக உயர்வு, 2,600 பேர் காயம்

சூடான் நாட்டில் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் இராணுவம் மற்றும் துணை இராணுவ படைகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு காணப்பட்டது.

துணை இராணுவ படைகளை, இராணுவத்துடன் இணைப்பது தொடர்பான இந்த மோதலில் துணை இராணுவ தளபதி முகமது ஹம்தான் தகலோ மற்றும் ராணுவ தளபதி அப்தல் பதா அல்-பர்ஹன் இடையே சுமுக முடிவு ஏற்படவில்லை.

இதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் இராணுவம் மற்றும் துணை இராணுவ படைகளுக்கு இடையே மோதல் வெடித்தது. அதிரடி ஆதரவு படைகள் என அழைக்கப்படும் துணை இராணுவத்தின் படைத்தளங்களை குறி வைத்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.

இந்த நிலையில் சூடானில் இராணுவத்தினருக்கு இடையேயான மோதலில் பொதுமக்கள் பலர் பலியானார்கள். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. தற்போது சூடானில் இராணுவ படைகள் இடையேயான தொடர் மோதலில் பலி எண்ணிக்கை 270 ஆக உயர்ந்து உள்ளது. 2,600 பேர் காயம் அடைந்து உள்ளனர். இந்த தகவலை சூடானின் சுகாதார அவசரகால இயக்கங்களுக்கான மையத்தின் அமைச்சகம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

உயிரிழந்தவர்களில் இந்தியர் ஒருவரும் அடங்குவார். இராணுவ மோதலில் ஐ.நா. பணியாளர்களும் உயிரிழந்து உள்ளனர். கடந்த சில நாட்களாக நீடித்து வந்த இந்த மோதலில் துணை இராணுவ தளங்கள் மீது சூடான் இராணுவம் வான்வழி தாக்குதல்களிலும் ஈடுபட தொடங்கியது.

இந்த சூழலில், சூடான் மோதலில் ஐரோப்பிய யூனியன் தூதர் ஒருவரை அவரது இல்லத்தில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. சூடானின் பள்ளி, மருத்துவமனை உள்ளிட்டவற்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. சர்வதேச சட்டங்களை மீறி இந்த வன்முறை தாக்குதல் தொடர்ந்து வருகிறது. போராளிகள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் காயமடைந்து உள்ளனர் என சூடானுக்கான ஐ.நா. தூதர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.

இந்த மோதல்களுக்கு அமெரிக்கா, சீனா, ரஷியா, எகிப்து, சவுதி அரேபியா, ஐ.நா. அமைப்புகள், ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் ஆப்பிரிக்க கூட்டமைப்பு ஆகியவை கண்டனம் தெரிவித்து உள்ளதுடன் இந்த மோதல் போக்கை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரும்படி வேண்டுகோளும் விடுத்து உள்ளது.

எனினும், மோதலில் இராணுவத்தின் கை மேலோங்கி உள்ளது என கூறப்படுகிறது. இதனால் சண்டையை நிறுத்துவதற்கான முயற்சிகள் முழுமை அடையவில்லை.

சூடானின் கிழக்கு பகுதிகள் மற்றும் செங்கடல் துறைமுக பகுதிகள் தனது கட்டுப்பாட்டுக்குள் உள்ளன என இராணுவ படைகள் கூறுகின்றன. ஆனால், தெற்கே கோர்டோபான் நகரில் வலுவாக துணை இராணுவ படை உள்ளது. இந்த பகுதியிலும், டார்பர் பகுதியிலும் சண்டை தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த சூழலில், சர்வதேச அளவில் ஒத்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை இரு தரப்பிலும் கடைப்பிடிப்பது என முடிவானது. ஆனாலும், மாலை 6 மணிக்கு பின் இந்த போர் நிறுத்த ஒப்பந்த நேரம் தொடங்கிய பின்னரும், கார்டோம் பகுதியில் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தப்படுவது தெரிய வந்தது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version