Home Top Story 6 மணி நேரத்தை கழிவறையில் கழித்த ஊழியர் பணி நீக்கம்- நீதிமன்றத்தை நாடியவருக்கு கிடைத்தது என்ன?

6 மணி நேரத்தை கழிவறையில் கழித்த ஊழியர் பணி நீக்கம்- நீதிமன்றத்தை நாடியவருக்கு கிடைத்தது என்ன?

சீனாவில் ஒரு நாளைக்கு சுமார் 6 மணி நேரம் கழிவறையில் நேரத்தை கழித்த ஊழியர் ஒருவரை நிறுவனம் வேலையில் இருந்து நீக்கியது செல்லும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

சீனாவைச் சேர்ந்த வாங் என்பவர் ஒரு நிறுவனத்தில் கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் 2013-ம் ஆண்டு ஒப்பந்தம் அல்லாத ஊழியராக நிறுவனம் அவரை நியமனம் செய்தது. வயிற்று பிரச்சினை காரணமாக 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிகிச்சை மேற்கொண்டார். அவருக்கு அறுவை சிகிச்சை சிறப்பான முறையில் செய்யப்பட்டது.

இருந்தாலும் வலி இருப்பதாக அவர் உணர்ந்தார். அதன்பிறகு தொடர்ந்து அவர் கழிவறையில் உட்கார்ந்து இருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் வேலை நேரத்தின்போது ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை கழிவறைக்கு செல்வாராம். ஒவ்வொரு முறையும் 47 நிமிடம் முதல் 3 மணி நேரம் வரை கழிவறையில்தான் இருப்பாராம். இது 2015-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து தொடர்ந்துள்ளது.

இதை அறிந்த நிறுவனம் 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந்தேதியில் இருந்து 17-ந்தேதி வரை அவர் எவ்வளவு நேரம் கழிப்பறை சென்றுள்ளார் என கணக்கெடுத்தது. அப்போதுதான் 47 நிமிடங்கள் முதல் 3 மணி நேரம் வரை கழிப்பறையில் நேரத்தை கழித்தது தெரியவந்தது. வேலை நேரத்தில் சுமார் 6 மணி நேரம் கழிவறையில்தான் இருந்துள்ளார் என்பதை அறிந்த நிறுவனம் அவரை செப்டம்பர் 23-ந்தேதி வேலையில் இருந்து அதிரடியாக நீக்கியது.

ஊழியர்களுக்கான கையேட்டில் சோம்பேறித்தனம், முன்னதாகவே வேலையில் இருந்து சென்றுவிடுதல், சரியான விளக்கம் அளிக்காமல் விடுமுறை எடுத்தல் ஆகியவை வேலையில் இருந்து நீக்க தகுதியானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும், வாங் தன்னை வேலையில் இருந்து நீக்கிய நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீண்ட காலமாக விசாரித்து வந்த நீதிமன்றம் நிறுவனம் வாங்-ஐ வேலையில் இருந்து நீக்கியது சட்டப்பூர்வமானது. மணிக்கணக்கில் கழிவறையில் இருந்தது மனித உடலியல் தேவைகளுக்கு அப்பாற்பட்டது என தீர்ப்பு வழங்கியது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version