Home உலகம் தியாகத்தின் திருவுருவம் தந்தை

தியாகத்தின் திருவுருவம் தந்தை

ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் ஹீரோ தந்தைதான். அவரை ரோல்மாடலாக வைத்துக்கொண்டுதான் ஒவ்வொரு செயலையும் செய்வார்கள். தந்தைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3வது ஞாயிறன்று தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு, தந்தையை மதிக்க கற்றுத் தருவதே இத்தினத்தின் நோக்கம்.

தாய் ஒரு குழந்தையை கருவில் 10 மாதங்கள் சுமந்து பெற்றெடுத்தார் என்றால், குழந்தையை தனது தோள்மீது தூக்கி சுமந்து வளர்ப்பவர் தந்தைதான். அன்பை கூட அதட்டலாக வெளிப்படுத்துவதான் தந்தையின் சிறப்பு. எப்படி இந்த தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது என்பதே ஒரு சுவாரஸ்யமான தகவல். நாம் அதற்குள் போகவேண்டாம். நாள்தோறும் அப்பா சொல் கேட்காமல், அவரை எதிர்த்து பேசி சண்டை போட்டாலும் இந்த ஒரு நாளிலாவது அவர் சொல் பேச்சு கேட்கலாம்.

நம்மை படிக்க வைத்து ஆளாக்கிய தந்தைக்கு நாம் செய்யும் கைமாறு என்ன தெரியுமா? இவனுடைய தந்தை இந்த அருமையான மகனைப் பெறுவதற்கு எத்தகைய கடும் தவத்தை செய்தானோ என்றும் மெச்சும் அளவிற்கு நாம் நம்முடைய தந்தைக்கு மரியாதையை தேடித்தரவேண்டும் என்று வள்ளுவரே கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்படும் நாள் வித்தியாசப்பட்டாலும், தந்தையர் தினம் என்ற அந்த நாள் உணர்வுபூர்வமான ஒரு நாள் என்பதனை மறுக்க முடியாது. தந்தையுடன் இருப்பவர் இந்த நாளில் அவருக்குப் பிடித்த பரிசுப் பொருள் வாங்கித் தரலாம்.

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே! அப்பாவின் கஷ்டங்கள் வெளியில் தெரிவதில்லை அவைகளை மனதில் புதைத்துவிடுவதால். தந்தையுடன் இல்லாமல் பணி நிமித்தமாக தனியாக வசிப்பவர்கள் போனில் பேசி வாழ்த்து கூறுங்கள். அவருக்கு பிடித்தமான பொருட்களை வாங்கி பார்சல் அனுப்புங்கள்.

தான் பட்ட கஷ்டத்தை தன் மகனோ, மகளோ படக்கூடாது என்று எத்தனையோ தியாகங்களை செய்து வளர்த்திருப்பார் தந்தை. இந்த நன்னாளில் உங்களின் தந்தை உங்களுக்காக செய்த தியாகங்களையும், பட்ட கஷ்டங்களையும் எண்ணிப் பாருங்கள். அவருக்கு மரியாதை செய்யுங்கள்.  ஒவ்வொரு குழந்தைக்கும் தன் முதல் ஹீரோ அப்பாதான். குடும்பத்தின் வளர்ச்சிக்காக தன்னையே மெழுகுவர்த்தியாய் அர்ப்பணித்த அனைத்து தந்தையர்களுக்கும் எமது அன்பார்ந்த தந்தையர் தின வாழ்த்துகள்!!!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version