Home Top Story மலேசிய இந்தியர்கள் வழிப்போக்கர்கள் அல்லர்

மலேசிய இந்தியர்கள் வழிப்போக்கர்கள் அல்லர்

பி.ஆர். ராஜன்

கோலாலம்பூர், ஜூன் 27-

மலேசிய இந்தியர்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைக்கும் வலுவான ஆதரவுக்கும் ஒற்றுமை அரசாங்கம் என்ன கைமாறு செய்யப் போகிறது?

ஒற்றுமை அரசாங்கத்தில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியும் பாரிசான் நேஷனல் கூட்டணியும் இடம்பெற்றுள்ளன. நாடு சுதந்திரம் பெற்றது முதல் பாரிசான் நேஷனல் கூட்டணிக்கு  இந்திய சமுதாயம் அதன் வற்றாத ஆதரவை வழங்கி வந்திருக்கிறது.

இந்திய சமுதாயத்தின் இந்த வலுவான ஆதரவுடன் அறுதிப் பெரும்பான்மையில் வெற்றி பெற்று அசைக்க முடியாத ஓர் அரசியல் சக்தியாக பாரிசான் நேஷனல் கூட்டணி விளங்கியது.

2008ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த ஆதரவு அலை பக்காத்தான் ராக்யாட், பின்னர் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி பக்கம் திரும்பியது. இந்தியர்களின் ஆதரவை இழந்த பாரிசான் நேஷனல் 60 ஆண்டுகள் ஆட்சி  அதிகாரத்தையும் இழந்தது.

கடந்த 2022 நவம்பர் மாதம் நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத்தேர்தலில் இந்திய சமுதாயத்தின் அமோக ஆதரவுடன் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற்றாலும் தனித்த பெரும்பான்மையைப் பெற முடியாத நிலையில் பாரிசான் நேஷனலுடன் இணைந்து ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்தது.

இந்நிலையில் இந்திய சமுதாயத்தின் ஓட்டு சக்தி என்ன என்பதை இந்த இரண்டு கூட்டணிகளுமே தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கின்றன. வரும் ஆறு மாநில சட்டமன்றத் தேர்தல்களில் இந்த இரண்டு கூட்டணிகளும் வெற்றி பெற வேண்டும்.

இதற்கு இந்திய சமுதாயத்தின் ஆதரவு இன்றியமையாததாகும். பக்காத்தான் ஹராப்பானும் பாரிசான் நேஷனலும் இதை ஒப்புக் கொள்கிறார்களோ இல்லையோ இதுதான் உண்மை. மலேசிய இந்தியர்கள் வெறும்  வழிப்போக்கர் அல்லர். மூன்றாம் தர பிரஜைகளும் அல்லர். இந்த நாட்டையும் மாநிலங்களையும் யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கக் கூடிய  வல்லமையும் சக்தியும் படைத்தவர்கள் இந்திய வாக்காளர்கள்.

* மஇகாவை இந்தியர்கள் கைவிடக்கூடாது

* கேட்கும் இடத்தில் நாம் – கொடுக்கும் இடத்தில் அவர்கள்

* உணர்ச்சிவசப்பட்ட முடிவுகள் வேண்டாம்

* இந்திய சமுதாயத்தின் உணர்வுகளை மதிக்கத் தவறியவர்களை மதிக்காதீர்கள்- ஆதரிக்காதீர்கள்

வரும் ஆகஸ்டு மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் ஆறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் நான்கு மாநிலங்களில் வெற்றியை நிர்ணயிக்கக் கூடிய துருப்புச் சீட்டுகளாக இந்தியர்கள் விளங்குகின்றனர்.

கெடா, பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகிய நான்கு மாநிலங்களில் இந்திய வாக்காளர்களின் ஓட்டுகளுக்கு கிராக்கி இருப்பதை முழுமையாக உணர வேண்டும். மலேசிய இந்தியர்கள் வழிப்போக்கர்கள் அல்லர்.  மாறாக தங்களுக்குத் தேவையான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கக்கூடிய ஜனநாயக உரிமையைப் பெற்றவர்கள்.

பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகிய மூன்று மாநிலங்களும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வசம் உள்ளன. கெடா, பாஸ் கட்சியின் ஆட்சி நிர்வாகத்தில் இருக்கிறது. பினாங்கு, சிலாங்கூர் , நெகிரி செம்பிலான் ஆகிய மூன்று மாநிலங்களில் இந்தியர்களுக்கு நியாயமான உதவிகள் கிடைத்து வருகின்றன.

கல்வி, தமிழ்ப்பள்ளிகள், ஆலயங்கள் , வர்த்தகங்கள் என உதவிகள் நியாயமான முறையில் கிடைத்து வருகின்றன. அதேபோன்று பி40 தரப்பு ஏழை இந்திய சமுதாயத்தை கை தூக்கி விடும் திட்டங்களையும் இம்மூன்று மாநிலங்களின் பக்காத்தான் அரசாங்கங்கள் நிறைவாகச் செய்திருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

ஆனால் இந்த உதவிகள்  வெறும் உதவிகளாக மட்டும் இல்லாமல் அவர்களின் வாழ்க்கையைத் தூக்கி நிறுத்தக்கூடிய அளவில் இருக்க வேண்டும் என்பது சமுதாயத்தின் எதிர்பார்ப்பாகும்.

தேர்தல் காலங்களில் வாக்குறுதிகள் குவிக்கப்படுகின்றன. இந்த வாக்குறுதிகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் இந்திய சமுதாயத்தினர் குறிப்பாக வாக்காளர்கள் உறுதியாக இருக்க வேண்டும். இது தேர்தல் காலம். இப்போது தங்களுக்குத் தேவையானதைக் கேட்கும் இடத்தில் இந்திய வாக்காளர்கள் இருக்கின்றனர். கொடுக்கும் இடத்தில் வேட்பாளர்கள்  இருக்கின்றனர்.

இந்த  வாய்ப்பை நழுவ விட்டால் இன்னும் ஐந்தாண்டு காலம் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் சமுதாயம் இருக்கும். பக்காத்தான் ஹராப்பானைப் பொறுத்தவரை இந்திய சமுதாயத்தின் கிட்டத்தட்ட 82 விழுக்காட்டு ஆதரவைப் பெற்றிருக்கிறது. இதனால் இந்திய சமுதாயத்தின் தேவைகளை நிறைவு செய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பு தனக்கு இருக்கிறது என்பதை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போது பாரிசான் நேஷனல் கூட்டணியும் ஒற்றுமை அரசாங்கத்தில் ஓர் அங்கமாக இடம்பெற்று, பரம வைரியான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியுடன் கரம் கோத்துள்ளது. இது இரட்டிப்பு பலத்தைத் தந்திருக்கிறது.

பாரிசான் நேஷனல் சமுதாயத்தை கைவிட்டு விடக்கூடாது

2008 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் வரை கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் பாரிசான் நேஷனலின் ஓட்டு வங்கியாக இந்தியர்கள் இருந்தனர் என்பது வரலாறு.

இந்த 60 வருடங்களில் பாரிசான் நேஷனல் ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் இந்தியர்களின்  அமோக ஆதரவு பெற்று கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் ஆட்சி பீடத்தை அலங்கரித்தது. பாரிசான் நேஷனல் கூட்டணியில் இடம்பெற்றிருந்த இந்தியர்களின் ஏகப் பிரதிநிதியாக இருந்த மஇகா நாடாளுமன்றத் தேர்தல்களிலும் சட்டமன்றத் தேர்தல்களிலும் 100 விழுக்காடு வெற்றியைப் பதிவு செய்தது என்பது கல்வெட்டில் பொறிக்கப்பட்ட வரலாறு.

ஆனால் 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு மலேசிய இந்தியர்களின் ஆதரவு அப்போதைய பக்காத்தான் ராக்யாட் பக்கம் திரும்பியது. இந்த ஆதரவு அலையில் மஇகாவின் பெரும் புள்ளிகள் உட்பட நாடாளுமன்ற, சட்டமன்ற வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவினர்.

2007 நவம்பர் மாதம் 25ஆம் தேதி நடைபெற்ற இந்தியர்களின் எழுச்சிப் பேரணியான ஹிண்ட்ராஃப் பேரணி மலேசிய இந்தியர்களின் அரசியல் களத்தை மாற்றியமைத்தது. 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தொடங்கிய தோல்வி முகாமிலிருந்து மஇகா மீளவே இல்லை.

பக்காத்தான் ராக்யாட் பின்னர் பக்காத்தான் ஹராப்பானாக மாறிய நாளிலிலிருந்து இந்தியர்களின் ஆதரவு ஆணி அடித்ததுபோல் பக்காத்தான் ஹராப்பானுக்கு பலமாக மாறியது.

இந்தியர்களுக்கு பக்காத்தான் ஹராப்பான் என்ன செய்யப்போகிறது?

இவ்வாறான  ஒரு சுழ்நிலையில் பக்காத்தான் ஹராப்பான்மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கும் மலேசிய இந்திய சமுதாயத்திற்கு இந்தக் கூட்டணி என்ன செய்யப்போகிறது? பக்காத்தான் ஹராப்பான் தங்களுக்கு நல்வாழ்வை அமைத்துத் தரும் என்று நம்பிக் கொண்டிருக்கும் இந்திய சமுதாயத்தின் நம்பிக்கையை நிறைவேற்றப் போகிறதா? அல்லது இனிப்பு வார்த்தைகளை மட்டும் வழங்கி விட்டு ‘டாட்டா’ காட்டாப்போகிறார்களா?

இந்தச் சமயத்தில் மஇகா என்ற பேரியக்கத்தை மலேசிய இந்தியர்கள் கைவிட்டு விடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதும் காலத்தின் கட்டாயமாகவும் அவசியமாகவும் இருக்கிறது. சமுதாயத்தின் மக்கள் பிரதிநிதிகள் இந்தத் தேர்தலில் சட்டமன்றங்களில் இடம்பெறுவதை இந்திய வாக்காளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

மஇகாவையும் அதன் வேட்பாளர்களையும் நாம் தொடர்ந்து நிராகரித்து வந்தால் அதன் பின்விளைவுகளை சமுதாயம் பின்னாளில் எதிர்கொள்ளும்போது தாங்க முடியாது என்ற பேருண்மையையும் சமுதாயம் நினைவில் கொள்ள வேண்டும்.

இவர்களை நிராகரிப்பது என்பது நம்மை நாமே நிராகரித்துக்கொள்வதற்கு சமம் என்பதையும் இந்திய சமுதாயம், குறிப்பாக இந்திய வாக்காளர்கள் மனதார உணர வேண்டும். மலாய்க்காரர்களையும் சீனர்களையும் ஓட்டுப்போட்டு வெற்றி பெறச் செய்யும் நாம் நம்மவர்களை உதாசீனப்படுத்தக் கூடாது. மன்னிப்பதும் மறப்பதும் நம் இனத்தின் மிகப் பெரிய பண்பாகும். இந்தத் தேர்தலில்  சமுதாயம் இதனை நிரூபித்துக் காட்ட வேண்டும்.

கெடாவில் இந்தியர்களின் நிலை என்ன?

கெடா மாநிலத்தில் பாஸ் தலைமையிலான அரசாங்கம் நிர்வாகம் செய்து வருகின்றது. இந்த அரசாங்கத்தின் கீழ் அம்மாநில இந்தியர்கள் எதிர்நோக்கிய இன்னல்களுக்கும் அவமானங்களுக்கும் பஞ்சமே இல்லை.

நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட ஆலயங்கள் இரவோடு இரவாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. வீட்டின் முற்றத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சிறு தெய்வங்களின் வழிபாட்டு மேடைகள் இடிக்கப்பட வேண்டும் என்று இவர்கள் தந்த அலைக்கழிப்பு கொஞ்சநஞ்சமல்ல.

சமுதாயத்தின் ஒருங்கிணைந்த எதிர்ப்பு இதனை சமாளிக்க உதவியது.இருப்பினும் அந்த மிரட்டல் ஓய்ந்தபாடில்லை. எப்போது வேண்டுமானாலும் மீண்டும் தலையெடுக்கும் நிலை உள்ளது.

அதேசமயத்தில் பாரிசான் நேஷனல் ஆட்சிக்காலத்தில் தைப்பூசத் திருநாளுக்கு வழங்கப்பட்டு வந்த விடுமுறையிலும் பாஸ் அரசாங்கம் கைவைத்ததை நாம் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. நம்முடைய சமய நம்பிக்கைகளை மதிக்கத் தெரியாத ஓர் அரசாங்கமாகவே பாஸ் நிர்வாகம் செயல்பட்டு வந்தது.

தொடர் போராட்டங்களுக்குப் பிறகு எரிச்சலுடனும் அரைகுறை மனதுடனும் இறங்கி வந்த மாநில பாஸ் அரசாங்கம் விழாக்கால விடுமுறையை அறிவித்தது. இந்த சட்டமன்றத் தேர்தலில் பாஸ் தலைமையிலான தேர்தல் களம் மீண்டும் வெற்றி பெற்றால் இந்திய சமுதாயம் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் எப்படி இருக்கும்? எந்த ரூபத்தில் இருக்கும் என்பதையும் சமுதாயம் குறிப்பாக கெடா மாநில வாக்காளர்கள்  தெளிவாகப் புரிந்து, தெளிந்து வாக்களிக்க வேண்டும்.

உணர்ச்சிவயப்படுவதைக்காட்டிலும் விவேகமான முடிவே கெடா மாநிலத்தில் இந்திய சமுதாயத்தின் வளமான எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்ற உண்மையை இந்திய வாக்காளர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

அன்வார்-ஸாஹிட் தரப்போகும் வாக்குறுதிகள் யாவை?

வரும் ஆறு மாநில சட்டமன்றத் தேர்தல்கள் பக்காத்தான் ஹராப்பான்- பாரிசான் நேஷனல் ஒற்றுமை அரசாங்கத்திற்கு மிகப் பெரிய ஒரு சவாலாக இருக்கும். இந்தத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தின் வெற்றி மத்தியில் அதன் வலிமையை அதிகரிக்கச் செய்யும்.

இந்நிலையில் இந்த வெற்றியை உறுதி செய்வதற்கு இந்திய வாக்காளர்களின் ஆதரவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அமாட் ஸாஹிட் ஹமிடியும் மிகச் சாதாரணமாகக் கருதி விடமுடியாது. ஒவ்வொரு வெற்றியும் இந்தக் கூட்டணிக்கு அவசியம் என்பதை இருவருமே தெளிவாக உணர்ந்திருக்கின்றனர்.

நிலைமை இவ்வாறிருக்க இவ்விரு  தலைவர்களும் இந்திய சமுதாயத்திற்குத் தரப்போகும் வாக்குறுதிகள் யாவை? என்ற கேள்விக்குறி சமுதாயத்தின் மத்தியில் தற்போது இமயம் உயரத்திற்கு வளைந்து நிற்கிறது. ஒற்றுமை அரசாங்கத்தின் வெற்றியானது இந்த வளைந்த கேள்விக்குறினை நிமிர்த்துமா?

பி.ஆர். ராஜன்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version