Home மலேசியா 5 இலட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருளுடன் கணவன், மனைவி கைது

5 இலட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருளுடன் கணவன், மனைவி கைது

ஜாலான் மேடான் ஈப்போவில், கடந்த திங்கட்கிழமை போலீசார் நடத்திய சோதனையில் போதைப்பொருள் வைத்திருந்த ஒரு தம்பதியினரை கைது செய்தனர்.

37 மற்றும் 39 வயதுடைய ஆணும் பெண்ணும் இரவு 7.45 மணியளவில் அவர்களது வாடகை வீட்டில் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடமிருந்து RM538,646 மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது என்று, பேராக் காவல்துறைத் தலைவர், டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹசன் பஸ்ரி தெரிவித்தார்.

அவற்றில் 8.5 கிராம் எடையுள்ள கெட்டமைன் என நம்பப்படும் போதை மருந்துகள், 8 எக்ஸ்டசி மாத்திரைகள், 5 எரிமின் 5 மாத்திரைகள் மற்றும் 22.4 கிராம் எடையுள்ள எக்ஸ்டசி எனப்படும் போதைப்பொருள் பவுடர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்,” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மேலும், அவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இரவு 10.25 மணியளவில் அதே பகுதியில் போதைப்பொருள்களை சேமித்து வைப்பதற்கும் பொட்டலமிடுவதற்கும் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு வீட்டை போலீசார் சோதனையிட்டனர்.

இந்த சோதனையில் 757 கிராம் எடையுள்ள கெட்டமைன் ரக போதைப்பொருள், 1.08 கிலோக்கிராம் எடையுள்ள எக்ஸ்டசி மாத்திரைகள், எரிமின் 5 மாத்திரைகள் (4.32 கிலோ), எக்ஸ்டசி பவுடர் (1.02 கிலோ) மற்றும் 141 பாக்கெட்டுகள் எக்ஸ்டசி பவுடர் (3.427 கிலோ) என சந்தேகிக்கப்படும் பாக்கெட்டுகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டன.

அவர்களிடமிருந்து நிசான் அல்மேரா ரக வாகனம், RM1,200 ரொக்கம் மற்றும் போதைப்பொருட்களை பொட்டலமிடுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சில உபகரணங்களையும் போலீசார் கைப்பற்றினர் என்று முகமட் யூஸ்ரி கூறினார்.

சிறுநீர் பரிசோதனையின் முடிவில் கணவர் கெட்டமைன் என்ற போதைப்பொருளுக்கு சாதகமாக இருப்பது கண்டறியப்பட்டது, ஆனால் தம்பதியருக்கு முந்தைய குற்றவியல் பதிவு இல்லை என்று அவர் கூறினார்.

“கடந்த மூன்று ஆண்டுகளாக அவர்கள் மாநிலம் முழுவதும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது, அதே நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை 40,000 போதைப்பித்தர்கள் பயன்படுத்த முடியும்,” என்று அவர் கூறினார்.

மேலும் தம்பதியரை நேற்று முதல் ஒரு வாரம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் இவ்வழக்கு ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார் .

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version