Home Top Story ஜப்பானில் இரத்த சிவப்பாக மாறிய ஆற்றுநீர்

ஜப்பானில் இரத்த சிவப்பாக மாறிய ஆற்றுநீர்

ஜப்பான் நாட்டிலுள்ள ஒகினாவா மாகாணத்தில் உள்ள நாகோ நகர ஆறு, திடீரென அடர் சிவப்பு நிறமாக மாறியுள்ளது.

இதைக் கண்ட உள்ளூர் மக்களும், பார்வையாளர்களும் பீதிக்குள்ளாகியுள்ளனர்.

அங்குள்ள ஒரு மதுபான ஆலையின் உள்ள குளிரூட்டும் அமைப்புகளில் ஒன்றில் இந்த கசிவு தொடங்கியதாகவும், இது நேற்று முன்தினம் நிகழ்ந்திருக்கலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. பின்னர் காலை 09:30 மணியளவில் கசிவு நிறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட பீர் தயாரிப்பு ஆலையான ஓரியன் ப்ரூவரிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உணவுகளில் பயன்படுத்தப்படும் வண்ண சாயம் ஆற்றில் கசிந்ததால் தண்ணீர் நிறம் மாறியதாகவும், இதனால் சுகாதார அபாயங்கள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளது.

அதேசமயம், மிகப் பெரிய பிரச்சனை மற்றும் கவலையை ஏற்படுத்தியதற்காக மன்னிப்பும் கேட்டிருக்கிறது.

“எங்கள் தொழிற்சாலை வசதிகளை குளிர்விக்கப் பயன்படுத்தப்படும் குளிரூட்டும் நீரில், உணவு சுகாதாரச் சட்டத்தின் அமலாக்க விதிமுறைகளில் பட்டியலிடப்பட்டுள்ள புரோபிலீன் கிளைகோல் எனப்படும் உணவு சேர்க்கைக்கான பொருள் இருக்கிறது. குளிர்விக்கும் நீரில் உள்ள அது கசிந்ததும், அந்த நீர், மழைநீர் வடிகாலின் வழியாக ஆற்றில் கலந்து ஆற்று நீர் சிவப்பு நிறமாக மாறி விட்டது” என்று ஓரியன் ப்ரூவரிஸ் கூறியது. கசிவு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக நிறுவனத்தின் தலைவர் ஹஜிமே முரானோ தெரிவித்தார்.

இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

அழகு சாதன தொழில்களில் பெருமளவில் பயன்படுத்தப்படும் இந்த பொருள் பொதுவாக பாதுகாப்பானது என்று அமெரிக்க நச்சுப் பொருட்கள் மற்றும் நோய்ப் பதிவேடு முகமை தெரிவித்துள்ளது.

தொழிற்சாலைகளால் இந்த இரசாயனம் குளிர்விக்கும் செயல்பாட்டில் உணவு சேர்க்கையாக பயன்படுத்தப்படுகிறது.

ஜப்பானிய ரிசார்ட் நகரமான நாகோ, மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் அன்னாசிப்பழ பண்ணைகளுக்கு பெயர் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version