Home Uncategorized தேசிய இயந்திரவியல் போட்டியில் ரிங்லெட் தமிழ்ப்பள்ளிக்கு மாபெரும் வெற்றி

தேசிய இயந்திரவியல் போட்டியில் ரிங்லெட் தமிழ்ப்பள்ளிக்கு மாபெரும் வெற்றி

ராமேஸ்வரி ராஜா

கேமரன் மலை, ஜூலை 7- 

8ஆவது முறையாக பகாங் மாநில ரீதியில் தங்கத்தையும் வெள்ளியையும் வென்றது ரிங்லெட் தமிழ்ப்பள்ளி

இடைநிலைப்பள்ளி ரீதியில் ரிங்லெட் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் தங்கம், வெண்கலம் வென்று சாதனை

  தேசிய அளவிலான இயந்திரவியல் (ரோபோட்டிக்) போட்டி 15 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதில் 7 ஆண்டுகளாக  தொடர்ந்து  பகாங் மாநில ரீதியில் தங்கத்தை வென்று  வந்த ரிங்லெட் தமிழ்ப்பள்ளி 8 ஆவது தடவையும் பதக்கத்தை தமிழ்ப்பள்ளிகளுக்குப் பெருமை சேர்த்துள்ளது. இப்பள்ளியில் படித்து சென்ற நமது மாணவர்கள் இடைநிலைப் பள்ளி பிரிவில் தங்கத்தை வென்றுள்ளனர் என்பதும் இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது என ரிங்லெட் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் எல். தவமலர் தெரிவித்தார்.

  பகாங் மாநில அளவில் தமிழ், சீன, தேசிய ஆரம்பப்பள்ளிகள், இடைநிலைப் பள்ளிகளுக்கான இயந்திரவியல் போட்டி நேற்று கேமரன்மலை சுல்தான் அமாட் ஷா இடைநிலைப் பள்ளியில் நடைபெற்றது. ரிங்லெட் தமிழ்ப்பள்ளியை பிரதிநிதித்து குழுவிற்கு 3 மாணவர்கள் என  2 குழுக்கள் பொதுப் பிரிவில் பங்குபெற்றன. அதில் ஒரு குழு தங்கத்தை வென்ற நிலையில் மற்றுமொரு குழு வெள்ளிப் பதக்கத்தை வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்தன.

  ரிங்லெட் தமிழ்ப்பள்ளியில் பயின்று இங்குள்ள இடைநிலைப் பள்ளிக்கு சென்ற நமது முன்னாள் மாணவர்கள் இரண்டு குழுக்களாக இடைநிலைப் பள்ளிகளுக்கான பொதுப் பிரிவில் பங்குபெற்றனர். அதில் ஒரு குழு தங்கத்தையும் மற்றுமொரு குழு வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். வெற்றிபெற்ற  குழுக்கள்  அடுத்து வரும் செப்டம்பர் மாதம், ஜோகூர் மாநிலத்தில் நடைபெறவிருக்கும் தேசிய ரீதியிலான இப்போட்டியில் பங்குபெறவிருக்கின்றனர் என்பது பெரும் மகிழ்ச்சியை தருகிறது எனவும் மக்கள் ஓசைக்கு வழங்கிய தகவலில் அவர் குறிப்பிட்டார்.

  மாணவர்களின் இந்த வெற்றிகளுக்கு பொறுப்பாசிரியர்கள் செ. ஆனந்தராஜூ, ச. ஹனிஷா, வா. வாசுகி (இடைநிலைப் பள்ளி), இரா. இராஜம்மாள், வே. பிரேமா ஆகியோருடன் பள்ளியின் இதர ஆசிரியர்கள், பெற்றோர் – ஆசிரியர் சங்கம், பெற்றோர் உறுதுணையாக இருந்துள்ளனர். அவர்களுக்கு இவ்வேளையில் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக கூறிய தவமலர், அனைவரது பங்களிப்புடனும் பள்ளி தொடர்ந்து பல சாதனைகளை புரியும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

பட விளக்கம் : 

1) பகாங் மாநில ரீதியில் ஆரம்பப்பள்ளி பொதுப் பிரிவில்  தங்கம் வென்ற ரிங்லெட் தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் பகாங் மாநில கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியர் தவமலர், பொறுப்பாசிரியர்கள்.

2) மாநில ரீதியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரிங்லெட் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்

3) தங்கம், வெண்கலப் பதக்கம் வென்ற ரிங்லெட் இடைநிலைப்பள்ளி மாணவர்கள்

4,5) இயந்திரவியல் போட்டியில் தங்களின் தருவிப்புகளுடன் மாணவர்கள் 

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version