Home Top Story தாய்லாந்து பிரதமரைத் தேர்ந்தெடுக்க அடுத்த வாரம் மீண்டும் வாக்கெடுப்பு: ஆனால் பிட்டாவுக்குத் தடை

தாய்லாந்து பிரதமரைத் தேர்ந்தெடுக்க அடுத்த வாரம் மீண்டும் வாக்கெடுப்பு: ஆனால் பிட்டாவுக்குத் தடை

பேங்காக்:

தாய்லாந்து நாடாளுமன்றம் பிரதமரைத் தேர்ந்தெடுக்க அடுத்த வாரம் இன்னொரு வாக்கெடுப்பு நடத்தவிருப்பதாகத் துணை சபாநாயகர் நேற்று (ஜூலை 20) தெரிவித்தார். ஆனால், தேர்தலில் வெற்றிபெற்ற “மூவ் ஃபார்வர்ட்” கட்சியின் தலைவர் பிட்டா லிம்ஜாரோன்ராட் வாக்கெடுப்பில் சேர்க்கப்படமாட்டார்.

“ஒவ்வொரு நாடாளுமன்ற அமர்விலும் ஒரு வேட்பாளரை ஒருமுறை மட்டுமே முன்மொழிய முடியும்,” என்று துணை நாயகர் பிச்சட் சுவாமுவாங்பான் வியாழக்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

பிட்டாவின் தகுதிநிலை குறித்து புதன்கிழமை நடந்த நெடுநேர விவாதத்திற்குப் பிறகு அவரை நிராகரிக்க நாடாளுமன்றம் முடிவு செய்ததால், வீதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கினர். தேர்தல் நடந்து இரண்டு மாதங்களாகியும் தாய்லாந்தில் இன்னும் நிலைமை சீரடையவில்லை.

அமெரிக்காவில் படித்த 42 வயது பிட்டாவின் கட்சியை பழமைவாதக் கட்சிகளும் இராணுவ ஆதரவுபெற்ற கட்சிகளும் கடுமையாக எதிர்க்கின்றன.

புதன்கிழமையன்று நாடாளுமன்றம் அவருக்கு எதிராக வாக்களித்தது. அதோடு, ஊடக நிறுவனம் ஒன்றில் பிட்டா பங்கு வைத்திருப்பதால் தேர்தல் சட்டத்தை மீறிவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படுகின்றன.

அந்த விசாரணை முடியும்வரை சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து பிட்டா இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்தக் குற்றச்சாட்டை பிட்டா மறுக்கிறார். பிட்டாவுக்கு எதிரான நடவடிக்கைகளால் அவரது ஆதரவாளர்கள் கோபமடைந்துள்ளனர்.

“தேர்தல் நடந்தும் இதுதான் எங்களுக்குக் கிடைக்குமானால், நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமே,” என்று ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் பேங்காக்கின் மத்திய வட்டாரத்தில் கூடியிருந்த கூட்டத்தினரிடம் கூறி கைத்தட்டல் பெற்றார்.

பிட்டாவின் எட்டு கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் பியூ தாய் கட்சியை சேர்ந்த நிலச்சொத்து தொழிலதிபர் ஸ்ரேத்தா தவிசின் அடுத்த வார வாக்கெடுப்பில் பிரதமர் பதவிக்கு முன்மொழியப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version