Home Top Story ஆப்கான் தேசிய பூங்காவிற்கு செல்ல பெண்களுக்கு தடை விதிப்பு

ஆப்கான் தேசிய பூங்காவிற்கு செல்ல பெண்களுக்கு தடை விதிப்பு

ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பு ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுவதுடன், பொதுவெளியில் அவர்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் தொடர்ந்து கடுமையாக்கப்படுகின்றன.

தலிபான் அமைப்பு ஆட்சியைக் கைப்பற்றியபோது கடுமையான கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்க மாட்டோம் என்று தலிபான் உறுதி அளித்தது. ஆனால் அந்த உறுதியை மீறிய தலிபான் ஆட்சியாளர்கள் கட்டுப்பாடுகளை அதிகரிக்கின்றனர்.

நாட்டில் உள்ள பெண்கள் தலைமைப் பதவிகள் வகிக்க தடை விதித்துள்ளனர். உயர்கல்வி படிக்க தடை விதித்தனர். ஆண் துணையுடன் இல்லாவிட்டால் வேலை செய்வதற்கும் பயணம் செய்வதற்கும் அனுமதி இல்லை. குளியலறைகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் பூங்காக்கள் உட்பட பல பொது இடங்களுக்கும் பெண்கள் செல்ல அனுமதி அளிக்கப்படுவதில்லை.

அந்த வரிசையில் இப்போது ஆப்கானிஸ்தானின் மிகவும் பிரபலமான பாமியன் மாகாணத்தில் உள்ள பேண்ட்-இ-அமிர் தேசிய பூங்காவுக்கு செல்ல பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பூங்காவிற்குச் செல்லும் போது பெண்கள் ஹிஜாப் அணியும் நடைமுறையை சரியாக கடைப்பிடிப்பதில்லை என்று அமைச்சர் முகமது காலித் ஹனாபி கூறியுள்ளார். சுற்றிப் பார்ப்பது பெண்களுக்கு அவசியமில்லை என்று கூறிய அவர், இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரை பெண்கள் அந்த பூங்காவிற்கு செல்வதை தடை செய்யும்படி, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் மதத் தலைவர்களிடம் வலியுறுத்தி உள்ளார்.

ஹிஜாப் அணியாமல் வருவது அல்லது சரியாக அணியாமல் வருவது பற்றிய புகார்கள் உள்ளன, இவர்கள் பாமியான் வாசிகள் அல்ல. அவர்கள் மற்ற இடங்களிலிருந்து இங்கு வருகிறார்கள், என பாமியன் ஷியா உலமா கவுன்சிலின் தலைவர் தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு, ஹெராத் மாகாணத்தில் தோட்டங்கள் அல்லது பசுமையான இடங்களைக் கொண்ட உணவகங்களுக்குள் குடும்பங்கள் மற்றும் பெண்கள் நுழைவதை அவர்கள் தடைசெய்ததாக பாக்ஸ் நியூஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version