Home Top Story விபத்தில் பலியான இந்திய மாணவி.. 11 ஆயிரம் டாலர் செக் எழுதுங்கள் என்று கேலியாக பேசிய...

விபத்தில் பலியான இந்திய மாணவி.. 11 ஆயிரம் டாலர் செக் எழுதுங்கள் என்று கேலியாக பேசிய போலீஸ் அதிகாரி

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் கடந்த ஜனவரி மாதம் போலீசாரின் ரோந்து வாகனம் மோதியதில் இந்திய வம்சாவளி மாணவி ஜானவி கந்துலா (வயது 23) பரிதாபமாக உயிரிழந்தார். சவுத் லேக் யூனியனில் சாலையை கடந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சியாட்டில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், சம்பவ இடத்தில் விசாரணையின்போது பதிவு செய்யப்பட்ட வீடியோவை காவல்துறை வெளியிட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளின் சீருடையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் (பாடிகேம்) அந்த வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்தது.

அதில், விபத்து தொடர்பாக போலீஸ் அதிகாரியிடம் விசாரணை நடத்திய மேலதிகாரி, அந்த பெண் இறந்துவிட்டாள் என்று கூறியபடி சிரிக்கும் சத்தம் கேட்கிறது. ஜோக் அடித்தபடி அந்த பெண்ணைப் பற்றி கேலியாகவும் பேசுகிறார். அவர், சிரித்துக்கொண்டே ‘ஒரு செக் எழுதுங்கள், 11 ஆயிரம் டாலர்கள்.. அந்த பெண்ணுக்கு எப்படியும் 26 வயது இருக்கும்’ என கூறுகிறார்.
இந்த உரையாடல் அதிர்ச்சி அளிப்பதாகவும் இதயத்தை நொறுங்கச் செய்வதாகவும் உள்ளது என சியாட்டில் சமூக காவல் ஆணையம் (சிபிசி) தெரிவித்துள்ளது. மக்கள் மதிக்கும் வகையில் காவல்துறை நடந்து கொள்ள வேண்டும் என்றும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்றும் சிபிசி தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. எனவே, விசாரணையை முடிக்கும் வரை கருத்து கூற முடியாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விபத்தில் பலியான ஜானவி கந்துலா, ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சவுத் லேக் யூனியனில் உள்ள நார்த்ஈஸ்ட் பல்கலைக்கழகத்தில் தகவல் அமைப்புகள் தொடர்பான முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version