Home Top Story உலகை புரட்டி போடும் mRNA வேக்சின் பற்றி சில தகவல்கள்

உலகை புரட்டி போடும் mRNA வேக்சின் பற்றி சில தகவல்கள்

வாஷிங்டன்: உலகை ஆட்டிப்படைத்த கொரோனாவுக்கு mRNA வகையான வேக்சின்களை கண்டுபிடித்த ஆய்வாளர்களுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அதென்ன mRNA வேக்சின், இது ஏன் முக்கியம் என்பது குறித்து நாம் இதில் பார்க்கலாம்.ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களைத் தேர்வு செய்து நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அதன்படி இந்தாண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரியைச் சேர்ந்த காடலின் கரிகோ மற்றும் அமெரிக்காவின் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

கடந்த 2019இல் தொடங்கி அடுத்த 3 ஆண்டுகளுக்கு நம்மைப் பாடாய் படுத்தி எடுத்த கொரோனா வைரஸில் இருந்து நம்மைக் காக்க mRNA தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வேக்சின் கண்டுபிடித்ததற்காக இந்த நோபல் பரிசு இவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த mRNA வகையான வேக்சின்கள் புதியவையாகும். கொரோனாவை தவிரப் பிற நோய்களுக்கு mRNA (ரைபோநியூக்ளிக் ஆசிட்) முறையில் வேக்சின்களை தயாரித்து சிகிச்சை அளிப்பது குறித்து ஆய்வாளர்கள் நீண்ட ஆய்வை செய்து வருகின்றனர். இந்த mRNA மூலம் எய்ட்ஸ் முதல் புற்றுநோய் வரையிலான நோய்களுக்குச் சிகிச்சை அளிக்க முடியும் என்பது ஆய்வாளர்கள் நம்பிக்கை.

இதன் காரணமாகவே கொரோனாவுக்கு வெற்றிகரமாக mRNA வேக்சின் கண்டுபிடித்த இந்த இரு ஆய்வாளர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக வேக்சின்களில் உயிரிழந்த அல்லது பலவீனப்படுத்தப்பட்ட வைரஸ்கள் இருக்கும். ஆனால், mRNA வேக்சின் அப்படி இருக்காது. மாறாக அதில் நமது உடம்பில் இருக்கும் டிஎன்ஏக்களுக்கு குறிப்பிட்ட மெசேஜ்கள் இடம் பெற்றிருக்கும். பைசர் மற்றும் மாடர்னா உருவாக்கிய வேக்சின்களில், ஆய்வகத்தால் உருவாக்கப்பட்ட mRNA மனித செல்களுக்கு சென்று கொரோனாவில் இருப்பதைப் போன்ற புரத ஆன்டிஜென்களை உருவாக்க அறிவுறுத்தும்.

இந்த ஆன்டிஜென்கள் கொரோனாவை போலவே இருக்கும். இதன் மூலம் ஒருவரது நோய் எதிர்ப்பு அமைப்பு கொரோனாவுக்கு எதிராக எப்படிப் போராட வேண்டும் என்பதை கற்றுக் கொள்கிறது. அந்த புரதங்களை நமது செல்கள் உருவாக்கிய பிறகு, இந்த mRNA மெசஜர்கள் செல்களால் அழிக்கப்படும். வழக்கமாக உயிரிழந்த வைரஸ்கள் செலுத்தப்படும் நிலையில், அத்துடன் ஒப்பிடும் போது இது மிகவும் புரட்சிகரமானதாகக் கருதப்பட்டது. இந்த mRNA குறித்த ஆய்வுகள் பல ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது. 1970களின் பிற்பகுதியில், முதல்முறையாக இந்த mRNAஐ பயன்படுத்தி சோதனைக் குழாய் செல்களை புரதங்களை உற்பத்தி செய்ய வைத்தனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றிகரமாக விஞ்ஞானிகள் இதை எலிகளிலும் சோதனை செய்து பார்த்தனர். இருப்பினும், இதில் இரு முக்கிய பிரச்சினைகள் இருந்தன.

கொரோனா மட்டுமின்றி வழக்கமான காய்ச்சல், ரேபிஸ் மற்றும் ஜிகா போன்ற நோய்களுக்கும் இதன் மூலம் வேக்சின் உருவாக்க முயல்கிறார்கள். மேலும், இதுவரை வேக்சினே கண்டுபிடிக்க முடியாத மலேரியா மற்றும் எய்ட்ஸ் உட்பட நோய்களுக்கும் இந்த mRNA தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆய்வாளர்கள் வேக்சின் கண்டுபிடிக்க முயல்கிறார்கள். மேலும், கேன்சரால் பாதிக்கப்பட்டோரின் உடலில் இருந்து புரதங்களை எடுத்து அதில் இருந்து பிரத்தியேக mRNA வேக்சின்களை உருவாக்கும் முயற்சியிலும் அவர்கள் இறங்கியுள்ளனர். இது குறிப்பிட்ட புற்றுநோய் செல்களை குறிவைக்க நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டும். இதன் மூலம் கேன்சரும் குணப்படுத்த முடியும் என்பது அவர்கள் நம்பிக்கை. இப்படி இந்த mRNA மூலம் பல வித வேக்சின்களை கண்டுபிடிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாகவே இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேக்சின் கண்டுபிடித்தவர்களுக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version