Home Top Story திடீரென கழிவுநீர் தொட்டியில் இறங்கிய பில் கேட்ஸ்! AI எல்லாம் இல்லை உண்மைதான்

திடீரென கழிவுநீர் தொட்டியில் இறங்கிய பில் கேட்ஸ்! AI எல்லாம் இல்லை உண்மைதான்

பிரஸ்ஸல்ஸ்: உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் திடீரென பெல்ஜியம் நாட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியில் இறங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவர் பில் கேட்ஸ். நாம் அனைவருமே இவரது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயங்கும் கணினிகளை நிச்சயம் பயன்படுத்தி இருப்போம். இப்போதும் கூட கணினிகளில் மைக்ரோசாப்ட் நிறுவனமே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

நீண்ட காலம் உலகின் பெரும் பணக்காரராக இருந்த பில் கேட்ஸ், சில ஆண்டுகளுக்கு முன்பு தான் மைக்ரோசாப்ட் சிஇஓ பொறுப்பில் இருந்து விலகினார். இவருக்குப் பதிலாக சத்யா நாதெல்லா தான் இப்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

பில்கேட்ஸ்: மைக்ரோசாப்டில் இருந்து ஓய்வு பெற்ற பெற்ற பில் கேட்ஸ் பல்வேறு தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இதற்கிடையே பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் இருக்கும் கழிவுநீர் தொட்டியில் அவர் இறங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவரே இணையத்திலும் பகிர்ந்துள்ளார். கடந்த நவம்பர் 19ஆம் தேதி உலக கழிப்பறை தினம் கடைப்பிடிக்கப்படும் நிலையில், அதன் ஒரு பகுதியாக அவர் இதைச் செய்துள்ளார்.

பிரஸ்ஸல்ஸில் கழிவுநீர் அருங்காட்சியகம் இருக்கும் நிலையில், அதைப் பார்வையிட பில் கேட்ஸ் கழிநீர் தடத்தில் இறங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவையும் பில் கேட்ஸ் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிர்ந்துள்ளார். கழிவுநீர் பாதையில் இறங்கும் பில் கேட்ஸ், பிரஸ்ஸல்ஸின் கழிவுநீர் அமைப்பின் மறைக்கப்பட்ட வரலாற்றை ஆய்வு செய்வது அந்த வீடியோவில் தெரிகிறது. மேலும், ஆய்வாளர்களுடன் கழிவுநீர் பாதை குறித்து அவர் ஆலோசிப்பதும் அதில் இருக்கிறது.

கழிவுநீர் தொட்டி: பிரஸ்ஸல்ஸ் நகரில் மொத்தம் 321 கிமீ தூரத்திற்குக் கழிநீர் அமைப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. பில் கேட்ஸ் இது குறித்துக் கூறுகையில், ”பிரஸ்ஸல்ஸில் நிலத்திற்கு அடியில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தை ஆய்வு செய்தேன். இந்த கழிவுநீர் அமைப்பு வரலாற்று ரீதியாகப் பல கதைகளைக் கொண்டுள்ளது.

கடந்த 1800களில் சேகரிக்கப்படும் கழிவுநீர் நேரடியாக சென்னே ஆற்றில் விடப்படும். இதனால் அப்போது காலரா போன்ற மோசமான தொற்று நோய்களும் கூட ஏற்பட்டது. இப்போது இந்த 321 கிமீ நீளமுள்ள கழிநீர் அமைப்பில் பெறப்படும் கழிவுகளை முறையாக அவர்கள் சுத்திகரிக்கிறார்கள்” என்றார்.

அறக்கட்டளை: பில் கேட்ஸ் இதுபோல செய்வது இது முதல்முறை இல்லை. துப்புரவு நடவடிக்கையில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த கடந்த சில ஆண்டுகளாகவே பில் கேட்ஸ் இதுபோன்ற செயல்களைச் செய்து வருகிறார். கடந்த 2015இல் கழிவுநீர் கலக்கும் ஆற்றில் இருந்து அவர் தண்ணீரை எடுத்துக் குடித்தார். இப்படி அவர் தொடர்ச்சியாகப் பல விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

இதற்காகவே அவர் தனது முன்னாள் மனைவியுடன் சேர்ந்து தி பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையையும் நடத்தி வருகிறார். இதன் மூலம் அவர் உலகெங்கும் பல்வேறு மக்கள் சேவையை அவர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அதன்படி உலகில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் சுகாதாரமான டாய்லெட் அமைத்துத் தரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி உலக கழிப்பறை தினம் அனுசரிக்கப்படும் நிலையில், இதில் விழிப்புணர்வை ஏற்படுத்த பில் கேட்ஸ் கழிவுநீர் குழாயில் நேரடியாக இறங்கியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version