Home Uncategorized “திடீரென பாய்ந்து வந்த ஏவுகணை..” ரஷ்ய நடிகை பரிதாபமாக உயிரிழப்பு

“திடீரென பாய்ந்து வந்த ஏவுகணை..” ரஷ்ய நடிகை பரிதாபமாக உயிரிழப்பு

மாஸ்கோ: ரஷ்யாவில் நடிகை ஒருவர் லைவ் ஷோவில் இருக்கும் போதே தாக்குதலில் உயிரிழந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த நடிகை பரிதாபமாக உயிரிழந்தார். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்தாண்டு போர் தொடங்கியது. இரு நாடுகளுக்கும் இடையே பல காலமாக மோதல் இருந்து வந்த நிலையில், திடீரென கடந்தாண்டு முழு வீச்சில் போரை ஆரம்பித்தது. இதில் ஆரம்பத்தில் ரஷ்ய ராணுவம் ஆதிக்கம் செலுத்திய போதிலும், அதன் பிறகு இந்தப் போர் ரஷ்யா கையை விட்டுச் சென்றுவிட்டது. அப்போது முதல் இரு தரப்பிற்கும் இடையே சண்டை தொடர்ந்தே வருகிறது.

ரஷ்யா போர்: இப்படி அந்த போர் 1.5 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், அங்கே ரஷ்ய நடிகை ஒருவர் பரிதாபமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் கிழக்கு உக்ரைனில் ரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் ரஷ்ய வீரர்களை உற்சாகப்படுத்த நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். டான்பாஸ் பகுதியில் அவர் லைவாக பர்பாமன்ஸ் செய்து கொண்டிருந்த போதே அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதில் உயிரிழந்தவர் 40 வயதான நடிகை பொலினா மென்ஷிக் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் கடந்த நவம்பர் 19ஆம் தேதி நடந்த தாக்குதலில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்தப் பகுதியில் தாக்குதல் நடந்துள்ளதை இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளது.

ஏவுகணை தாக்குதல்: இரு தரப்பிற்கும் இடையே மோதல் இருக்கும் ஃபரண்ட் லைன் பகுதியில் இருந்து சுமார் 60 கிமீ தொலைவில் உள்ள குமாச்சோவ் என்ற பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இதில் கிராமத்தில் இருந்த பள்ளி மற்றும் கலாச்சார மையம் ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ரஷ்ய ராணுவத்தில் இருந்து எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்து தகவல்களை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் பகிர்ந்து கொள்ளவில்லை.

அதேநேரம் ரஷ்யாவின் 810வது தனி கடற்படை காலாட்படை படைப்பிரிவைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் ரஷ்ய வீரர்கள் 25 பேர் கொல்லப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் உக்ரைன் அதிகாரி கூறினார்.

ஷாக் வீடியோ: இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சி ஒன்றும் இணையத்தில் பரவி வருகிறது. அதில் ரஷ்ய ராணுவ வீரர்களிடையே இசை நிகழ்ச்சி நடக்கிறது. அதில் இருவர் பாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக அங்கே ஏவுகணை மற்றும் பீரங்கி குண்டுகள் தாக்கியதால் மின்விளக்குகள் அணைந்து போவது அதில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

கடந்த மாதம் உக்ரைனின் 128ஆவது படைப் பிரிவைக் குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி இருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. அதேநேரம் ரஷ்ய ராணுவத்திற்கு எதிராகவும் ரஷ்யாவிலேயே விமர்சனம் எழுந்துள்ளது. அதாவது, சண்டை நடக்கும் இடத்தில் இருந்து 60 கிமீ தொலைவு என்பது பாதுகாப்பான தூரம் இல்லை என்றும் இவ்வளவு அருகில் எதற்காக இத்தனை வீரர்களை ரஷ்ய ராணுவம் ஒன்று சேர அனுமதித்தது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version