Home Top Story நகைச்சுவை நடிகர் போண்டாமணி காலமானார்!

நகைச்சுவை நடிகர் போண்டாமணி காலமானார்!

நகைச்சுவை நடிகர் போண்டாமணி உடல்நலக் குறைவால் காலமானார். இவரது திடீர் மறைவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர் நடித்த ‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘வின்னர்’ உள்ளிட்ட படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. வடிவேலு உடன் இவர் சேர்ந்து நடித்திருந்த பல்வேறு நகைச்சுவை காட்சிகள் தனி கவனம் பெற்றன. ரஜினி, விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்திருந்தார். இந்த நிலையில், கடந்த சில வருடங்களாக சிறுநீரகப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தார் போண்டாமணி.
இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை முடிந்து தனது வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். அந்த சமயத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விழாக்களில் கலந்து கொண்டார். இவரது உடல்நிலை அறிந்து அப்போது அதிமுக சார்பில் ஒரு லட்ச ரூபாய் அளிக்கப்பட்டது. இப்போதைய திமுக அரசு, ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தது. இரண்டு கிட்னிகளையும் மாற்ற வேண்டும் என்ற சூழ்நிலையில், அதற்கான பணம் எட்டு லட்ச ரூபாய் அவருக்குத் தேவைப்பட்டது.

இந்த நிலையில், நேற்று இரவு 11 மணிக்கு பல்லாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

நடிகர் போண்டா மணியின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்கர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version