Home Top Story சிங்கப்பூர், பணியிடத்தில் நடந்த விபத்தில் தமிழகத் தொழிலாளி பலி!

சிங்கப்பூர், பணியிடத்தில் நடந்த விபத்தில் தமிழகத் தொழிலாளி பலி!

டந்த டிசம்பர் 2ஆம் தேதி நிகழ்ந்த பணியிட விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது கட்டுமான தொழிலாளியான பொன்ராமன் ஏழுமலை உயிரிழந்தார்.

இந்நிலையில், அவரது மரணம் குறித்து அவருடைய உறவினர்கள் விளக்கம் கேட்கின்றனர்.

எண் 770 ஜூரோங் சாலையில் தெங்கா ஒருங்கிணைந்த ரயில், பேருந்து பணிமனை கட்டப்பட்டு வருகிறது. அங்குள்ள கட்டுமானத் தளத்தில் டிசம்பர் 2ஆம் தேதி இரவு 11.20 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.

கான்கிரீட் விசைக்குழாய் உதவியாளராக சிங்கப்பூரில் எட்டு மாதங்களாக வேலை செய்து வந்த ஏழுமலை, அந்த விசைக்குழாய் டிரக்கின் அடிச்சட்டத்திற்கும் விசைக்கட்டைக்கும் இடையே சிக்கிக்கொண்டார்.

‘டிஎம்சி கான்கிரீட் பம்ப்பிங் சர்வீசஸ்’ நிறுவன ஊழியரான ஏழுமலை, ஃபேரர் பார்க் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். காயங்கள் காரணமாக சிகிச்சை பலனின்றி அடுத்த நாள் அவர் உயிரிழந்தார்.

அந்தக் கட்டுமானத் திட்டத்தின் பிரதான ஒப்பந்ததாரரான ‘சைனா ரயில்வே 11 பியுரோ குரூப் கார்ப்பரேஷன்’ (சிங்கப்பூர் கிளை), ஏழுமலையை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல தனியார் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ததாக ஒரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏழுமலையின் மரணத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அவருடைய குடும்பத்தார் மனமுடைந்து போயுள்ளதாக சிங்கப்பூரில் வேலை செய்யும் அவருடைய உறவினர்கள் இருவர் கூறினர். மேலும் இச்சம்பவம் பற்றிப் பேசுவதால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் குறித்த அச்சம் காரணமாக தங்களது பெயரைக் குறிப்பிட வேண்டாம் என அவ்விருவரும் கேட்டுக்கொண்டார்.

தம் குடும்பத்தில் வேலை செய்த ஒரேயொருவரான ஏழுமலை, தம்முடைய தாத்தா, பெற்றோர், அக்கா, 13 வயது தம்பி ஆகியோருக்கு ஆதரவளித்ததாக உறவினர்கள் கூறினர்.

இச்சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினர் கேள்வி எழுப்பி வருகின்றனர், “ஏன் ஆம்புலன்சை அழைக்கவில்லை, அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு ஏன் கொண்டுசெல்லப்படவில்லை? என்கின்றனர்.

“ஏழுமலையை நாங்கள் இழந்துவிட்டோம். எதிர்காலத்தில் இனி இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கக்கூடாது,” என உறவினர்கள் கூறினர்.

இயந்திரப் பொறியியல் துறையில் பட்டயக் கல்வி முடித்த ஏழுமலை, நவம்பரில் ‘கிளாஸ் 2பி’, ‘3சி’ ஓட்டுநர் உரிமங்களைப் பெற்றார். அடுத்து ‘கிளாஸ் 3’ உரிமம் பெறுவதற்கு அவர் பயிற்சி மேற்கொள்ளவிருந்தார்.

அவரது மரணத்தால் அவருடைய குடும்பத்துக்கு பல்லாயிரக்கணக்கான வெள்ளி கடன்சுமை ஏற்பட்டுள்ளது. ஏழுமலையைப் படிக்க வைக்கவும் சிங்கப்பூரில் அவர் வேலை செய்வதற்குரிய கட்டணம் செலுத்தவும் குடும்பத்தார் கடன் தொகையைப் பயன்படுத்தி இருந்தனர்.

இந்நிலையில், தெங்கா பணிமனை திட்ட மேம்பாட்டாளரான நிலப் போக்குவரத்து ஆணையம், இந்த விபத்து குறித்து தான் வேதனை அடைந்ததாகக் குறிப்பிட்டது. உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு உதவ ‘டிஎம்சி கான்கிரீட் பம்ப்பிங் சர்வீசஸ்’ நிறுவனத்துடனும் பிரதான ஒப்பந்ததாரருடனும் தான் பணியாற்றி வருவதாக அது சொன்னது.

“மனிதவள அமைச்சு, காவல்துறை விசாரணைக்கும் நாங்கள் உதவி வருகிறோம்,” என்று ஆணையம் கூறியது.

முதற்கட்ட விசாரணையின்படி, இந்த விபத்தில் சந்தேகப்படும்படி எதுவும் கண்டறியப்படவில்லை எனக் காவல்துறை தெரிவித்தது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version