Home Top Story வங்காளதேசத்தில் பயணிகள் ரயிலுக்கு தீ வைப்பு; ஐவர் உடல் கருகி பலி

வங்காளதேசத்தில் பயணிகள் ரயிலுக்கு தீ வைப்பு; ஐவர் உடல் கருகி பலி

வங்கதேசத்தின் டாக்காவின் கோபிபாக்கில் பெனாபோல் எக்ஸ்பிரஸ் ரயிலின் நான்கு பெட்டிகள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

வங்கதேசத்தின் ஜெஸ்ஸோரில் இருந்து தலைநகர் டாக்காவுக்கு நேற்று இரவு பெனாபோல் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. இரவு 9 மணியளவில் கோபிபாக்கில் இந்த ரயில் வந்தபோது, ரயிலின் 4 பெட்டிகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்பகுதியில் இருந்த குடியிருப்பு வாசிகள் முதலில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன் பிறகு, சம்பவ இடத்துக்கு ஏழு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. சுமார் 2 மணி நேர போராட்டத்துக்குப் பின் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இருப்பினும் இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

வங்கதேசத்தில் நாளை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பிரதமர் ஷேக் ஹசீனா அரசின் கீழ் நேர்மையாக தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை என குற்றம் சாட்டியுள்ள எதிர்க்கட்சியான ‘தி நேஷனலிஸ்ட் கட்சி’ போராட்டத்தை அறிவித்துள்ளது.
தேர்தல் நடைபெற இரண்டு நாள்களுக்கு முன்னதாக நேற்று இரவு, பெனாபோல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ரயிலுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

வங்கதேசத்தில், இன்று காலை 6 மணி முதல் வரும் திங்கள்கிழமை காலை 6 மணி வரை 48 மணி நேர கடையடைப்பு போராட்டத்துக்கு எதிர்க்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. வங்கதேச பொதுத்தேர்தலை ஒட்டி பல எதிர்க்கட்சி தலைவர்கள் டாக்கா போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பலர் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக எதிர்க்கட்சியை சேர்ந்த பிரதமர் வேட்பாளரான கலீதா ஜியாவும் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version