Home Top Story செயற்கை நுண்ணறிவு 40% வேலைகளைப் பாதிக்கும் – அனைத்துலகப் பண நிதியம்

செயற்கை நுண்ணறிவு 40% வேலைகளைப் பாதிக்கும் – அனைத்துலகப் பண நிதியம்

வா‌ஷிங்டன்:

செயற்கை நுண்ணறிவு, உலகளவில் 40 விழுக்காட்டினரின் வேலைகளைப் பாதிக்கக்கூடும் என்று அனைத்துலகப் பண நிதியம் கணித்துள்ளது.

பெரும்பாலான சூழல்களில் செயற்கை நுண்ணறிவு வேறுபாட்டை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று அனைத்துலகப் பண நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜியேவா கூறியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு சமூக அளவில் மேலும் அதிருப்தியை ஏற்படுத்துவதைத் தடுக்கவேண்டும்; கவலை தரும் இந்தப் போக்கை அரசியல் தலைவர்கள் கவனிக்கவேண்டும் என்று ஜார்ஜியேவா சொன்னார்.

செயற்கை நுண்ணறிவின் பெரும் வளர்ச்சி, அதன் பலன்களையும் அபாயங்களையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக வளர்ந்த பொருளியல்களில் செயற்கை நுண்ணறிவினால் கூடுதல் வேலைகள் பாதிக்கப்படும் சாத்தியம் அதிகம் என்று அனைத்துலகப் பண நிதியம் குறிப்பிட்டது. அத்தகைய நாடுகளில் சுமார் 60 விழுக்காட்டு வேலைகள் பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் பாதி வேலைகளில் ஊழியர்கள் செயற்கை நுண்ணறிவால் பலனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் மேலும் ஆக்கபூர்வமாகச் செயல்பட செயற்கை நுண்ணறிவு வகைசெய்யும் என்று நம்பப்படுகிறது.

அதேவேளை, தற்போது மனிதர்கள் கையாளும் சில முக்கியப் பணிகளை செயற்கை நுண்ணறிவு செய்யக்கூடும். இதனால் மனிதவளத்துக்கான தேவை குறையலாம். அதனைத் தொடர்ந்து ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் பாதிக்கப்படக்கூடும். சில வேலைகள் அறவே இல்லாமல் போகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், குறைந்த வருமானம் வழங்கப்படும் நாடுகளில் செயற்கை நுண்ணறிவு, 26 விழுக்காட்டு வேலைகளை மட்டுமே பாதிக்கும் என்று நிதியம் முன்னுரைத்துள்ளது.

அத்தகைய நாடுகளில் செயற்கை நுண்ணறிவின் பலன்களை அனுபவிப்பதற்கான உள்கட்டமைப்போ திறமையான ஊழியரணியோ இருக்காது என்று ஜார்ஜியேவா கூறினார். அதனையடுத்து காலப்போக்கில் நாடுகளுக்கிடையே இருக்கும் வேறுபாடுகள் மோசமடையக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version