Home Top Story சிங்கப்பூரர்களிடம் மோசடி செய்ததாக ஐந்து மலேசியர்கள் மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூரர்களிடம் மோசடி செய்ததாக ஐந்து மலேசியர்கள் மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூர்:

சிங்கப்பூரர்கள் சிலரை ஏமாற்றி மோசடி வலையில் சிக்க வைத்ததாக நம்பப்படும் ஐந்து மலேசியர்கள் மீது இன்று குற்றம் சுமத்தப்பட்டதாக சிங்கப்பூர் போலீஸ் தெரிவித்துள்ளது.

குறித்த ஐந்து ஆடவர்களும் 19 முதல் 36 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

ஜனவரி 16ஆம் தேதியன்று ஜோகூர் மாநிலத்தில் உள்ள இரண்டு அடுக்குமாடி வீடுகளில் மலேசியக் காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடிச் சோதனையை அடுத்து, இந்த ஐவரும் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் சந்தேக நபர்கள் அனைவரும் ஜனவரி 23ஆம் தேதியன்று சிங்கப்பூர் காவல்துறை அதிகாரிகளிடம் மலேசியக் காவல்துறையால் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் இந்தக் கும்பல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மோசடிக் குற்றங்களைத் தொடங்கியதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் கும்பல் 500 மோசடிப் புகார்களுடன் தொடர்புடையது என்றும் $1.4 மில்லியன் இழப்பு ஏற்படுவதற்குக் காரணமாக இருந்திருக்கக்கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இந்த ஐவரும் பாதிக்கப்பட்டவர்களின் நண்பர்களைப் போல நடித்து தொலைபேசி அழைப்பு, குறுஞ்செய்திகள் மூலம் தொடர்புகொண்டு பண உதவி கேட்டு ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.

இத்தகைய மோசடி மூலம் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து நவம்பர் மாதம் வரை 6,300க்கும் மேற்பட்டோர் ஏமாந்தனர்.

இத்தகைய மோசடிக் குற்றங்களால் ஏற்பட்ட இழப்பு குறைந்தபட்சம் $21.1 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் இந்த ஆடவர்களுக்குப் பத்தாண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version