Home Top Story இந்திய மாணவர் சுத்தியலால் அடித்துக் கொலை; அமெரிக்காவில் சம்பவம்

இந்திய மாணவர் சுத்தியலால் அடித்துக் கொலை; அமெரிக்காவில் சம்பவம்

நியூயார்க்:

அமெரிக்காவில் 25 வயது இந்திய மாணவர் ஒருவர் சுத்தியலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் MBA பட்டம் பெற்ற விவேக் சைனி என்ற அம்மாணவர், தான் கொலைசெய்யப்படமுன் இரு நாள்களாக ஜூலியன் ஃபாக்னர், 53, என்ற வீடில்லாத ஆடவருக்கு உதவி வந்தார். இந்நிலையில், ஃபாக்னரே விவேக்கை அடித்துக் கொன்றார்.

ஆனால் துளியும் இரக்கமின்றி, கிட்டத்தட்ட 50 முறை ஃபாக்னர் சுத்தியலால் விவேக்கைத் தாக்கியது கண்காணிப்புப் படக்கருவியில் பதிவாகியுள்ளது.

ஜார்ஜியா மாநிலம், லித்தோனியா நகரில் இம்மாதம் 16ஆம் தேதி இரவு இக்கொடூரச் சம்பவம் நிகழ்ந்தது.

அங்குள்ள ‘கெவ்ரான் ஃபுட் மார்ட்’ என்ற கடையில் விவேக் பகுதிநேரமாக வேலைசெய்து வந்தார். அவர் இரு நாள்களாக ஃபாக்னர் கேட்டவற்றைக் கொடுத்து உதவி செய்ததாக எம்9 செய்தி ஒளிவழி ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 28) தெரிவித்தது.

ஜனவரி 14ஆம் தேதி மாலையில் இருந்தே ஃபாக்னர் அக்கடைக்கு வருவதும் போவதுமாக இருந்ததாகக் கூறப்பட்டது.

“அவர் எங்களிடம் சிப்ஸ், கோக் கேட்டார். தண்ணீர் உட்பட அவர் கேட்டதெல்லாம் கொடுத்தோம்,” என்று அக்கடை ஊழியர்களில் ஒருவர் சொன்னார்.

“எல்லா நேரமும் அவர் கடையிலேயே அமர்ந்திருந்தார். வெளியில் குளிராக இருந்ததால் அவரை நாங்கள் வெளியே போகும்படி சொல்லவே இல்லை,” என்றார் அவர்.

இந்நிலையில், ஜனவரி 16ஆம் தேதி இரவு, ஃபாக்னரைக் கடையைவிட்டு வெளியே செல்லும்படி விவேக் கேட்டுக்கொண்டார்.

ஃபாக்னர் அங்கு வந்து இரண்டு நாள்களாகி விட்டதாகக் கூறிய விவேக், இல்லையெனில் காவல்துறையை அழைக்க வேண்டியிருக்கும் என்று சொன்னதாக அந்த ஊழியர் விவரித்தார்.

கடையிலிருந்து வீட்டிற்குக் கிளம்ப விவேக் ஆயத்தமானபோது, ஃபாக்னர் அவரைச் சுத்தியலால் தாக்கியதாகக் காவல்துறை தெரிவித்தது.

பின்னாலிருந்து தாக்கிய அவர், பின்னர் விவேக்கின் முகத்திலும் தலையிலும் கிட்டத்தட்ட 50 முறை சுத்தியலால் அடித்ததாகக் கூறப்பட்டது.

சம்பவ இடத்திற்குச் சென்றபோது, விவேக்கின் உயிரற்ற உடலுக்கு அருகே ஃபாக்னர் சுத்தியலுடன் நின்றிருந்ததைக் காவல்துறை கண்டது. சுத்தியலைக் கீழே போடும்படி அவரைக் காவல்துறை எச்சரித்தது.

இந்தியாவில் பொறியியல் பட்டப் படிப்பை முடித்த விவேக், ஈராண்டுகளுக்குமுன் மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றார். அவர் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்.

இதனிடையே, ஃபாக்னர் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version