Home Top Story இந்தியாவில் செல்போன் வெடித்ததால் பற்றி எரிந்த வீடு: 4 குழந்தைகள் பலி!

இந்தியாவில் செல்போன் வெடித்ததால் பற்றி எரிந்த வீடு: 4 குழந்தைகள் பலி!

உத்தரப் பிரதேசத்தில் செல்போன் திடீரென வெடித்து சிதறி, தீப்பிடித்த விபத்தில் வீட்டில் இருந்த 4 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்போன்களை சார்ஜ் செய்வதற்கு செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளன. இருப்பினும் சில நேரங்களில் செல்போன்களை சார்ஜ் செய்யும் போது ஏற்படும் ஷார்ட் சர்க்யூட் காரணமாக அடிக்கடி செல்போன்கள் வெடித்து சிதறும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகருக்கு அருகே, செல்போன் ஒன்று வெடித்ததில் ஏற்பட்ட் தீவிபத்தில் சிக்கி, 4 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள பல்லவபுரம் பகுதியில் நேற்று இரவு ஜானி என்ற கூலித்தொழிலாளி தனது வீட்டில் செல்போனை சார்ஜ் போட்டிருந்தார். அப்போது வீட்டில் சரிகா (10), நிகரிகா (8), சன்ஸ்கர் (6), களு (4) ஆகிய 4 குழந்தைகளும் மனைவி பபிதாவும் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென செல்போன் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட தீ, குழந்தைகள் மீது போர்த்தப்பட்டிருந்த போர்வையில் பற்றி மளமளவென பரவியது. இதில் குழந்தைகள் மற்றும் பபிதா ஆகிய ஐந்து பேரும் படுகாயம் அடைந்தனர். தீ விபத்து ஏற்பட்ட உடன், ஜானி தீயை அணைக்க தண்ணீர் எடுப்பதற்காக வீட்டை விட்டு வெளியே வந்ததால், அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

தீவிபத்தில் படுகாயமடைந்த குழந்தைகளின் தந்தை ஜானி
தீவிபத்தில் படுகாயமடைந்த குழந்தைகளின் தந்தை ஜானி

இதனிடையே படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய 4 குழந்தைகள் உட்பட ஐந்து பேரையும் மீட்டு அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு குழந்தைகள் 4 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். படுகாயமடைந்த பபிதாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக மீரட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்போன் வெடித்து சிதறிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version