Home Top Story தேர்தல் பத்திர ஊழலை திசை திருப்பும் முயற்சியே கெஜ்ரிவால் கைது -கேரள முதல்வர்

தேர்தல் பத்திர ஊழலை திசை திருப்பும் முயற்சியே கெஜ்ரிவால் கைது -கேரள முதல்வர்

திருவனந்தபுரம்:

தேர்தல் பத்திர ஊழலிலிருந்து திசை திருப்பவே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கை இடம்பெற்றதாகக் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் சாடியுள்ளார்.

தேர்தல் பத்திரங்கள் பற்றிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களுக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தும் என மத்திய அரசு, பாரதிய ஜனதா கட்சி (பாஜக), சங்பரிவார் அமைப்புகளுக்கு நன்றாகத் தெரியும் என்றார் அவர்.

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை அதிகாரிகள் அண்மையில் கைது செய்தனர். இதற்கு இந்தியா கூட்டணி உட்பட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, மூன்றாவது முறையாக கேரளாவில் நேற்று (மார்ச் 24ஆம் தேதி) நடத்திய பேரணியில் முதல்வர் பினராயி விஜயன் உரையாற்றினார்.

தம் உரையில் அவர், “இந்தியா இதுவரை பார்த்திராத அளவுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஊழலாகத் தேர்தல் பத்திர ஊழல் பார்க்கப்படுகிறது.

“அதனால், மத்தியில் ஆளும் அரசு இந்த விவகாரத்திலிருந்து மக்களை திசைதிருப்ப டெல்லி முதல்வரைக் கைது செய்துள்ளது,” என்று கூறினார்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு மற்றும் சங்பரிவார் அமைப்பை அவர் கடுமையாகச் சாடினார். நாட்டின் சட்ட விதிகளைக் குறைத்து மதிப்பிடுவதாகவும் அரசியல் சாசன அமைப்பின் கட்டுப்பாட்டைப் பறித்துக்கொள்ள சங்பரிவார் அமைப்பு முயற்சி செய்கிறது என்றும் அவர் கூறினார். நீதி அமைப்பைக்கூட அச்சுறுத்தப் பார்க்கின்றனர் என்றார் கேரள முதல்வர்.

மேலும், “தேர்தல் பத்திரத்தை அறிமுகம் செய்தபோதே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. அது ஓர் ஊழல் கருவியாக செயல்படும் எனக் கூறியதுடன் அந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்திற்குக் கொண்டுசென்றோம்,” என்று அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version