Home விளையாட்டு கெடா மாநில கராத்தே கழகத்தின் தலைவராக மாஸ்டர் ஸ்டாலின் மீண்டும் போட்டியின்றி தேர்வு

கெடா மாநில கராத்தே கழகத்தின் தலைவராக மாஸ்டர் ஸ்டாலின் மீண்டும் போட்டியின்றி தேர்வு

(கே. ஆர். மூர்த்தி)

கூலிம்,மார்ச் 26-
கெடா மாநில கராத்தே கழகத்தின் தலைவராக மாஸ்டர் எஸ். ஸ்டாலின் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு இங்குள்ள கிலாடி, தாமான் நெனாஸ்சில் அமைந்துள்ள விஸ்மா கராத்தேவில் கெடா மாநில கராத்தே கழகத்தின் 27ஆம் ஆண்டுப்பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநில நடப்பு பொறுப்பாளர்கள், மாநில நிலையில் அமைந்துள்ள மாவட்ட கராத்தே கழகத்தின் தலைவர்கள், பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
கெடா மாநில கராத்தே கழகத்தின் மாநிலப் பொறுப்பாளர்கள் தேர்வுக்கு முன்பு ஆண்டுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் பேசிய மாஸ்டர் ஸ்டாலின் கெடா மாநில கராத்தே கழகம் விஸ்மா கராத்தே கட்டடத்தில் கராத்தே பயிற்சியை நடத்தி வருவது போல் தமிழ்ப்பள்ளிகள் உட்பட பல இடங்களில் இப்பயிற்சியை நடத்தி வருகின்றது.

இதன் மூலம் பயிற்சி பெற்று வரும் பல மாணவர்களை மாவட்ட நிலையில், மாநில நிலையில் நடத்தப்படும் போட்டிகள், தேசிய நிலையில் நடத்தப்படும் போட்டிகள், அனைத்துலக நிலையில் நடத்தப்படும் சுக்மா உட்பட பல போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை வென்று நாட்டிற்கும் கழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர் எனக் குறிப்பிட்டார்.

தங்கத்தை நோக்கி திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பயிற்சியை நடத்தி வருகின்றது. கடந்தாண்டு அறிமுகப் படுத்தப்பட்ட இப்போட்டியின் மூலமாக தேசிய அளவிலும் மாநில அளவிலும் மாணவர்கள் கலந்துகொண்டு பதக்கங்கள் வென்று வந்துள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வரும் மாணவர்களுக்கு கெடா மாநில கராத்தே கழகத்தின் தலைமை பயிற்றுநர் கோஷி ப. தியாகராஜன், கோஷி எம். விஜய் ஆகிய இருவரும் தன்னலம் கருதாது அர்ப்பணிப்பு உணர்வோடு பயிற்சியை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் மாநில கராத்தே கழகம் மாணவர்களின் தரத்தை உயர்த்த இளம் தலைமுறையினருக்கு பலவகையில் வாய்ப்புகளை வழங்கி, அவர்கள் மூலமாக

பல மாணவர்களை இக்கழகம் உருவாக்கி வருகின்றது. இதுபோன்ற பயிற்றுநர்கள் பணத்தை ஒரு பொருட்டாக கருதாமல் கழகத்தின் மேம்பாட்டிற்கும் மாணவர்களின் வளர்ச்சிக்கும் அரும்பாடுபட்டு வருவதை அவர் பாராட்டினார்.

மேலும் அவர் கூறுகையில் இம்மாநில கராத்தே கழகத்தின் எல்லா செயல் நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக இருந்து வரும் அதன் மாநில, மாவட்ட நிலையிலான பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளையில் கராத்தே பயிற்சிக்கு தங்களை பிள்ளைகளை அனுப்பி வைக்கும் பெற்றோருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

ஆண்டு பொதுக்கூட்டத்திற்குப் பிறகு ஆண்டறிக்கை, கணக்கறிக்கை முறையாக முன்மொழிந்து வழிமொழிந்து ஏகமனதாக ஏற்றுக்கொண்டபின் புதிய நிர்வாக பொறுப்பாளர்கள் தேர்வு நடைபெற்றது. தலைவராக மீண்டும் மாஸ்டர் ஸ்டாலின் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். மாநிலத் துணைத்தலைவராக டத்தோ எம். முனியாண்டி, உதவித் தலைவர்களாக கேப்டன் எம். பரகுருபாலன், மாஸ்டர் ப.தியாகராஜன், ஹசார் பின் அமாட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.கராத்தே கழகத்தின் செயலாளராக பெ. செல்வராஜூ, துணைச்செயலாளராக மாஸ்டர் டே. பாக்கியராஜ், பொருளாளராக சேம் என்ற எஸ். ஆரோக்கியசாமி, செயலவை உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

ஆண்டுப் பொதுக்கூட்டத்தை தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒகினோவா கோஜு ரியோ கராத்தே கழகத்தின் தலைமை நிர்வாகி பேராசிரியர் பாலசுப்பிரமணியம் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். இக்கூட்டத்தில் 2024 ஆண்டுக்கான சிறந்த பெற்றோர் நால்வருக்கு சிறப்பு செய்யப்பட்டது. அதோடு கழகத்தின் மாணவி லோகிஷாவுக்கு மாஸ்டர் கோஷி விஜேய் தலைமையில் கறுப்பு பட்டைக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு சிறப்பு வருகையாளராக கூலிம் ஹாய் தேக் பார்க் ஊராட்சி மன்ற உறுப்பினர் எம். மாரிமுத்து செல்வம் கலந்துகொண்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version