Home Hot News இந்திய மக்கள் பிரதிநிதிகள் கொந்தளிப்பு துணையமைச்சருக்கு கெடு வைத்தனர்

இந்திய மக்கள் பிரதிநிதிகள் கொந்தளிப்பு துணையமைச்சருக்கு கெடு வைத்தனர்

பி.ஆர்.ராஜன்

மடானி அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பெண் துணையமைச்சரை 7 நாட்களில் வீட்டிற்கு அனுப்புவோம் என்று இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் சபதம் எடுத்திருக்கும் ஒரு விவகாரம் சூடான விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

இந்திய சமுதாயத்தின் மக்கள் பிரதிநிதிநிகளாக இருக்கக் கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற  உறுப்பினர்கள், செனட்டர்கள் ஆகியோரை மதிக்கத் தவறிய ஒற்றுமைத்துறை அமைச்சரையும் அவரின் துணையமைச்சரையும் காய்ச்சி எடுத்திருக்கின்றனர் என்ற தகவலும் கசியத் தொடங்கி இருக்கிறது.

செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற மேலவை கூட்ட அறையில் இந்திய சமுதாயத்தை பிரதிநிதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், செனட்டர்கள் ஆகியோர் ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங், துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி ஆகியோருடன் ஒரு கலந்துரையாடலை நடத்தியிருக்கின்றனர்.

மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவின் (மித்ரா) ஆகக் கடைசியான நிலவரங்கள் குறித்து கேள்வி எழுப்பி இருக்கின்றனர். இந்த சந்திப்பு இந்திய மக்கள் பிரதிநிதிகளுக்கும் அமைச்சருக்கும் இடையிலான ஒரு பிரத்தியேக சந்திப்பாக இருந்திருக்க வேண்டும். ஆனால் துணையமைச்சர் அவருக்கு வேண்டிய சில அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சரவாக்கைச் சேர்ந்த பெமாண்டு அமைப்பின் பிரதிநிதிகளையும் அழைத்து வந்திருந்தது சலசலப்பை ஏற்படுத்தியதாக நம்பப்படுகிறது.

மித்ரா விவகாரத்தில் பெமாண்டுவை கொண்டு வரவேண்டிய அவசியம் என்ன என்று செனட்டர் டத்தோ சி.சிவராஜ் கேள்வி எழுப்பியிருக்கிறார். மற்ற பிரதிநிதிகளும் சில கேள்விகளை முன்வைத்திருக்கின்றனர்.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவராக காணப்பட்ட அமைச்சர் பதில் சொல்ல முடியாமல் வௌிநடப்பு செய்திருக்கிறார். அமைச்சரிடம் நேரடியாக தனிப்பட்ட  முறையில் சந்திப்பு நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த இந்திய மக்கள் பிரதிநிதிகளுக்கு இது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது என்று நம்பத் தகுந்த வட்டாரம் ஒன்று தெரிவித்தது.

அமைச்சர் வெளியேறியதும் அவரின் துணையமைச்சர் தற்காப்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஓர் அமைச்சரிடம் இப்படி எல்லாம் பேசக் கூடாது என்று பாடம் நடத்தியிருக்கிறார்.

துணையமைச்சரிடம் இந்திய மக்கள் பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்காமல் அமைச்சரை தற்காப்பதிலேயே குறியாக இருந்திருக்கிறார். மேலும் தேவையற்ற குற்றச்சாட்டுகளையும் கூறியிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.

ஒரு கட்டத்தில் துணையமைச்சர் எம்.குலசேகரன் காட்டமாக பேசியிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் தேவையில்லாததை பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று அவர் சாடியதாகவும் நம்பப்படுகிறது.

டத்தோ ரமணன் மித்ரா சிறப்புப் பணிக்குழு தலைவராக இருந்தபோது முறைகேடுகள் நடந்ததாக துணையமைச்சர் குற்றம்சாட்டியிருக்கிறார். அதற்கு ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர். ஆர்.எஸ்.என்.ராயர் சூடாக பதில் தந்திருக்கிறார் என்றும் நம்பப்படுகிறது.

டத்தோ ரமணன் தலைமையிலான மித்ரா சிறப்புப் பணிக்குழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன். துணையமைச்சரின் இந்த குற்றச்சாட்டு அபாண்டமானது. அடிப்படையற்றது. அப்படி முறைகேடுகள் நடந்திருந்தால் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் (எஸ்பிஆர்எம்) புகார் செய்ய வேண்டியதுதானே என்று பதிலடி தந்திருக்கிறார்.

இந்த சந்திப்பில் ஆர்.எஸ்.என்.ராயர், குலசேகரன், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ், சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யுனேஸ்வரன்,  சட்டமன்ற உறுப்பினர் எம்.துள்சி, செனட்டர் சிவராஜ், செனட்டர் டாக்டர் ஆர்.ஏ.லிங்கேஸ்வரன் உட்பட மேலும் சில மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் என்று நம்பப்படுகின்றது.

துணையமைச்சரின் பொறுப்பற்ற பேச்சுக்கும் அமைச்சரின் அவமதிக்கும் செயலுக்கும் ஆட்சேபம் தெரிவித்து அந்த சந்திப்பிலிருந்து அனைத்து இந்திய மக்கள் பிரதிநிதிகளும் வௌிநடப்பு செய்தனர் என்று அவ்வட்டாரம் கூறியது.

இதனிடையே இன்னும் 7 நாட்களுக்குள் துணையமைச்சர் பொறுப்பிலிருந்து அவரை நீக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர்கள் சூளுரைத்தனர் என்று தகவல் அறிந்த ஒரு வட்டாரம் தெரிவித்தது. பிரதமரிடம் இதன் தொடர்பாக ஒரு மகஜரையும் அவர்கள் சமர்ப்பிக்க இருப்பதாக நம்பப்படுகிறது.

மலேசிய இந்தியர்களை பிரதிநிதிக்கும்  தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் பேச முடியாத அல்லது பேச நேரமில்லாத அமைச்சரும் துணையமைச்சரும் இந்திய சமுதாயத்திற்கு என்ன செய்துவிடப் போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது

இன்னும் 5 நாட்களில் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்?

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version