Home Top Story 6 மாதங்களில் 33 விமானிகள் குடி போதையில் விமானம் இயக்கினர்; வெளியான அதிர்ச்சி தகவல்

6 மாதங்களில் 33 விமானிகள் குடி போதையில் விமானம் இயக்கினர்; வெளியான அதிர்ச்சி தகவல்

சமீபத்தில் தாய்லாந்திலிருந்து இந்தியாவுக்கு சர்வதேச விமானத்தை இயக்கிய விமானி ஒருவர் மிகை போதையில் இருப்பது கண்டறியப்பட்டதால் அவரை ஏர் இந்தியா நிறுவனம் பணியிலிருந்து நீக்கியுள்ளது.

பொதுவாகனங்களை ஓட்டுவோர் போதையில் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் பாய்கின்றன. அதிலும் ஆபத்துகள் சூழந்த ஆகாயப் பயணத்தில் போதையில் விமானத்தை செலுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

ஆகாய விமானங்களை செலுத்துவோர், நீண்ட நேர சர்வதேச விமானப் பயணங்களின் ஊடே நடுவானில் ஆட்டோ பைலட் மோடில் விமானத்தின் ஓட்டத்தை தீர்மானித்துவிட்டு ஓய்வெடுக்கவோ, உறங்கச் செல்வதோ உண்டு. ஆனால் விமானத்தை செலுத்துவதில் தவறான முடிவுகளை எடுக்க வாய்ப்பாகும் போதையை, விமானிகள் தவிர்க்கும் வகையில் திடமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

இதற்காக விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக விமானிகளுக்கு ப்ரீத் அனலைசர் சோதனை செய்யப்படுகிறது. இதில் தேறினால் மட்டுமே அவர்கள் விமானங்களுக்கு அனுமதிக்கப்படுவர். அல்லாது போனால் அவர்கள் மீது துறை ரீதியிலான மற்றும் சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் பாயும்.

தாய்லாந்தின் ஃபுகெட்டிலிருந்து இந்தியாவின் டெல்லிக்கு சென்ற சர்வதேச விமானம் ஒன்று இந்த வகையில் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. அதன் தலைமை விமானி ஒருவர் முழு போதையில் இருந்தது, அவருக்கு விமானத்தை விட்டு இறங்கியதும் மேற்கொள்ளப்பட்ட ப்ரீத் அனலைசர் சோதனையில் உறுதியானது. விமானத்தில் ஏறுவதற்கு முன்னதாக நடந்தப்பட்ட சோதனையில் தேறிய அந்த விமானி, சர்வதேச விமானங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் மதுவை அருந்தியதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து போதையுடனே தாய்லாந்திலிருந்து இந்தியாவுக்கு சர்வதேச விமானத்தை அந்த விமானி இயக்கியது உறுதிசெய்யப்பட்டதால், உடனடியாக விமான நிறுவனமான ’ஏர் இந்தியா’ அவரை பணியிலிருந்து நீக்கியது. அத்தோடு அவருக்கு எதிராக புகாரளித்து சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளது.

“இது போன்ற போதை விவகாரங்களில் எங்களுக்கு சகிப்புத்தன்மை கிடையாது. போதை விமானிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் தொடரும். தாய்லாந்து விமானத்தை போதையில் செலுத்தி வந்த விமானியை பணியிலிருந்து நீக்குவதோடு, குடிபோதையில் விமானத்தை இயக்குவது குற்றச் செயல் என்பதால் எஃப்ஐஆர் பதிவு செய்யவும் புகார் அளித்துள்ளோம். மேலும் இவை அனைத்தும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்கும் முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

கடந்த 2023ல் முதல் ஆறு மாதங்களில், 33 விமானிகள் மற்றும் 97 கேபின்-குழு உறுப்பினர்கள் போதை உட்கொண்டதற்கான ப்ரீதலைசர் சோதனையில் தோல்வி அடைந்துள்ளனர். முதன்முறை ப்ரீதலைசர் சோதனையில் தோல்வியடைந்தால் மூன்று மாதங்களுக்கு உரிமம் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும். அதே நபர் இரண்டாவது முறையாக வரம்பிற்கு மேல் கண்டுபிடிக்கப்பட்டால் அவரது உரிமம் மூன்று ஆண்டுகளுக்கு இடைநிறுத்தப்படும். மூன்றாவது முறை சிக்கினால், உரிமம் முழுவதுமாக ரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version