Home Top Story சிங்கையில் ஜிஎஸ்டி வசூலிக்கப்படாத அரசாங்க சேவைகளின் பட்டியல்

சிங்கையில் ஜிஎஸ்டி வசூலிக்கப்படாத அரசாங்க சேவைகளின் பட்டியல்

சிங்கப்பூர்:

பொருள், சேவை வரி (GST) வசூலிக்கப்படாத அரசாங்க சேவைகளின் பட்டியல் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சில சேவைகளின் கட்டணங்களுக்குத் தவறுதலாக ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் அதுபோன்ற தவறு மீண்டும் நிகழாதிருக்க பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக நிதி இரண்டாம் அமைச்சர் சீ ஹொங் டாட் இன்று (ஏப்ரல் 2) தெரிவித்தார்.

“ஜிஎஸ்டி வசூலிக்கப்பட வேண்டிய சேவைகள் பற்றி அந்தந்த அரசாங்க அமைப்புகளே தீர்மானித்துக்கொள்ளலாம் என்பதற்குப் பதில், இனிமேல் நிதி அமைச்சும் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையமும் அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து இதன் தொடர்பில் அணுக்கமாகப் பணியாற்றும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

அந்தத் திருத்தத்தின்படி, ஏறக்குறைய 100 அரசாங்கச் சேவைகளுக்கான கட்டணத்தில் இனி ஜிஎஸ்டி சேர்க்கப்படும். தேர்வு மற்றும் ஆய்வு தொடர்பான கட்டணங்களும் அதில் அடங்கும்.

சட்டத்திருத்தம் ஜிஎஸ்டி மீதான அரசாங்கக் கொள்கையின் நோக்கத்தைத் தெளிவாக்குவதாக நாடாளுமன்ற விவாதத்தின்போது சீ குறிப்பிட்டார்.

கட்டுப்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் விதிக்கப்படும் கட்டணங்களுக்கு வரி வசூலிக்கப்படக்கூடாது என்பது திருத்தத்தின் அணுகுமுறை என்றும் அவர் சொன்னார்.

“நிபுணருக்கான உரிமம் பெறுதலுக்கும் அதனைப் புதுப்பித்தலுக்கும் விதிக்கப்படும் கட்டணமும் வரிவிலக்கில் அடங்கும். அதேநேரம், பொது விளையாட்டுக்கூடங்களை வாடகைக்குவிடுவது போன்ற சேவைக்கான கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி பொருந்தும்.

“தனியார் துறை அல்லது அரசுசாராத் துறைக்கு அளிக்கப்படக்கூடிய அல்லது தருவிக்கப்படக்கூடிய சேவைகளுக்கான கட்டணங்கள் ஜிஎஸ்டிக்கு உட்பட்டவை என்பதை வரையறுப்பதால் வரிவிதிப்பில் சமநிலையை உறுதிப்படுத்துகிறது இந்த அணுகுமுறை.

“ஜிஎஸ்டி முறையைக் கடைப்பிடிக்கும் சில நாடுகளும் இதே கொள்கையைப் பின்பற்றுகின்றன,” என்று விளக்கினார் போக்குவரத்து அமைச்சருமான சீ.

அரசாங்கச் சேவைகளுக்கான கட்டணத்திற்கு எவ்வாறு வரி வசூலிக்கப்படுகிறது என்பதை அறிய 2023 நவம்பர் மாதம் நிதி அமைச்சு உள்ளக மறுஆய்வை நடத்தியது.

ஜிஎஸ்டியை வசூலிப்பதில் தவறுகள் நேர்ந்தது அப்போது அரசாங்கத்தின் கவனத்துக்கு வந்தது.

ஆறு அரசாங்க அமைப்புகள் குறைந்தபட்சம் $7.5 மில்லியன் மதிப்புள்ள ஜிஎஸ்டியைத் தவறுதலாக வசூலித்ததாக கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி அரசாங்கம் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version