Home Makkal Osai Exclusive 600,000 சாலை விபத்துகள் – 6,000 உயிரிழப்புகள்

600,000 சாலை விபத்துகள் – 6,000 உயிரிழப்புகள்

பி.ஆர்.ராஜன்

மலேசியாவில் 2023 ஜனவரி 1 தொடங்கி டிச.30 வரை 600,000 சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றனர். இவற்றுள் 6,000 உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கின்றன.  இது நாம் சொல்லும் புள்ளி விவரங்கள் அல்ல. புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் புலன் விசாரணை, சாலைப் போக்குவரத்து அமலாக்க இலாகா வெளியிட்டிருக்கும் அதிகாரப்பூர்வத் தகவலாகும்.

மலேசியாவின் 3.3 கோடி மக்கள் தொகையோடு ஒப்பிடுக்கையில் 600,000 சாலை விபத்துகளும் 6,000 மரணங்களும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. வளர்ந்து வரும் ஒரு நாட்டிற்கு இதுவொரு மிகப்பெரிய இழப்பு மட்டுமன்றி எச்சரிக்கையையும் விடுத்திருக்கிறது.  ஒவ்வோர் ஆண்டும் சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் அதிகரித்தவண்ணமே உள்ளன.

உலக நாடுகளில் மிக அதிகமாக சாலை விபத்துகளும் உயிரிழப்புகளும் நிகழும் ஒரு நாடாக மலேசியா விளங்குகிறது. இந்த விபத்துகளுக்கு யார் காரணம்? என்ன காரணம் என்பதை அலசி ஆராய்ந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பொறுப்பில் அரசாங்கம் இருக்கிறது.

ஒரு சாலை விபத்தானது ஒருவரது வயது, அவர் செய்யும் வேலை ஆகியவற்றைப் பார்த்து நிகழ்வது இல்லை. சாலைகளில் நிகழும் விபத்துகளில் பச்சிளம் குழந்தைகள், சிறார்கள், மூத்த பிரஜைகள், பதின்ம வயதினர், இளைஞர்கள் என பல்வேறு வயதிலானவர்கள் உயிரிழக்கின்றனர்.

சாமானியர்கள், போலீஸ்காரர்கள், டாக்டர்கள், ராணுவப் படையினர், தாதியர், தீயணைப்புப் படையினர், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், அரசாங்க உயர் அதிகாரிகள் போன்றவர்களின் உயிர்களும் சாலை விபத்துகளில் அபகரிக்கப்படுகின்றன.

இந்தச் சாலை விபத்துகள் ஒருவரது மதம், சமயம், இனம், நிறம்  பார்த்து நிகழ்வது கிடையாது. மலேசிய சாலைகளில் நிகழும் விபத்துகள் ஒரு புரியாத புதிராகவே இருக்கின்றன. ஏன்? எதற்கு என்பதற்கு விடை காண முடியவில்லை.

பொதுவில் சாலைகளின் பொதுவான நிலை, அவற்றில் ஏற்பட்டுள்ள குழிகள் போன்றவை இந்த விபத்துகளுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன என்பதனை மறுப்பதற்கில்லை.  வாகனமோட்டிகளின் அலட்சியம்,  அதீத வேகம் போன்றவை அடுத்த காரணங்களாக இருக்கின்றன.

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கங்கள் – பிரச்சாரங்கள் ஒவ்வொரு நாளும் நடத்தப்பட்டாலும் சாலை விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்க இயலவில்லை.  இதற்கு என்ன காரணம் என்பதை அலசி ஆராய்ந்து அரசாங்கம் மாற்று நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

இது தவிர சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்தும் அரசாங்கம் யோசிக்க வேண்டும். வாகனங்கள் விற்பனைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

திருடனாகப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. அதுபோல் மக்கள் குறிப்பாக வாகனமோட்டிகள் சிந்திக்கத் தவறினால் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கவே முடியாது

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version