Home Top Story AI தொழில்நுட்பம் மூலம் இந்திய தேர்தலை சீர்குலைக்க சீனா திட்டம்!

AI தொழில்நுட்பம் மூலம் இந்திய தேர்தலை சீர்குலைக்க சீனா திட்டம்!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம், இந்தியாவில் தேர்தல் செயல்பாடுகளை சீர்குலைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கி, ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தற்போது நாடு முழுவதும் தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, பொதுமக்களையும் தேர்தல் ஜுரம் தொற்றிக் கொண்டுள்ளது.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் வாட்ஸ் அப், முகநூல், எக்ஸ், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களே முக்கிய பிரச்சார கருவியாக உருவெடுத்துள்ளன.

தலைவர்கள் தும்மினால் கூட வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பும் நிகழ்வுகள் சர்வசாதாரணமாக நிகழ்ந்து வருகிறது. அரசியல் தலைவர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் வீடியோக்களை உருவாக்கி, சமூக வலைதளங்களில் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, பொதுமக்கள், வாக்காளர்கள் தங்கள் பார்வைக்கு கிடைக்கும் சமூக வலைதளச் செய்திகளை அப்படியே நம்பாமல் அவற்றின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

இந்நிலையில் ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் டீப் பேக் வீடியோக்கள், செய்திகள் உருவாக்கப்பட்டு தேர்தல் நடவடிக்கையில் பெரும் தாக்கத்தையும், பின்னடைவையும் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளிவரத் துவங்கியுள்ளன.

சமீபத்தில், பிரபல தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது, ஏ.ஐ மூலம் ஏற்படும் சமூக தீமைகள், பெண்கள் முன்னேற்றம், வேளாண்மை மற்றும் சுகாதாரத்தில் புதிய கண்டுபிடிப்புகள் ஆகிய பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

இச்சூழலில் மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், “சீன அரசு ஆதரவு சைபர் குழுக்கள், வட கொரியாவுடன் இணைந்து 2024-ல் திட்டமிடப்பட்ட பல தேர்தல்களைக் குறிவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு உலகம் முழுவதும் குறிப்பாக இந்தியா, தென் கொரியா மற்றும் அமெரிக்காவில் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இச்சூழலில் சீனா தனது நலன்களுக்கு பயனளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட தகவல்களைப் பரப்பும் என நாங்கள் மதிப்பிடுகிறோம்.” என குறிப்பிட்டுள்ளது.

உலகம் முழுவதும் இந்த ஆண்டு 64 நாடுகளில் தேசிய தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த நாடுகள் உலக மக்கள் தொகையில் மொத்தம் 49 சதவீதத்தை கொண்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் செயல்பாடுகளில் ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் போலி தகவல்களை பரப்பி தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பானது, ஜனநாயக நெறிமுறைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

‘டீப் பேக்’, நடக்காத அல்லது இட்டுக்கட்டப்பட்ட நிகழ்வுகள் ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டு எதிரிகளை வீழ்த்த பரப்பப்படும் ஆபத்து உள்ளது. இதன் மூலம் வேட்பாளர்களின் அறிக்கைகள், பிரச்சினைகள் மீதான நிலைப்பாடுகள் தொடர்பாக கருத்துகளை உருவாக்கி மக்களை தவறாக வழிநடத்துவதை இந்த தந்திரங்கள் நோக்கமாக கொண்டுள்ளன. சமூக ஊடகங்களில் வெளி வரும் கருத்துகள் நன்கு அறியப்படாமல் ஏற்கப்பட்டால் தேர்தலில் வாக்காளர்களின் முடிவெடுக்கும் திறனில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

தவறான தகவல்களை உடனடியாக அடையாளம் கண்டு பதிலளிப்பதற்கான வழிகாட்டுதல்கள், நெறிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கெனவே வழங்கியுள்ளது.
கடந்த மாதம், ‘சாட்ஜிபிடி’-ஐ உருவாக்கிய ‘ஓபன்ஏஐ’ பிரதிநிதிகள், இந்திய தேர்தல் ஆணைய உறுப்பினர்களை சந்தித்தனர். அப்போது, வரவிருக்கும் தேர்தல்களில் செயற்கை நுண்ணறிவை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தேர்தல் ஆணைய உறுப்பினர்களுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version