Home Hot News கோல குபு பாரு இடைத் தேர்தல்: ‘இந்தியர்களே கிங்மேக்கர்ஸ்’

கோல குபு பாரு இடைத் தேர்தல்: ‘இந்தியர்களே கிங்மேக்கர்ஸ்’

பி.ஆர். ராஜன்

உலுசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியிலுள்ள கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல்  அறிவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் இத்தொகுதியை ஜசெக தன்னுடைய கோட்டையாக தொடர்ந்து நிலைநிறுத்திக் கொள்ளுமா என்ற கேள்வி  தலைதூக்கியிருக்கிறது.

இத்தொகுதியை ஜசெக கடந்த மூன்று தவணைகளாக  தன்னுடைய இரும்புக் கோட்டையாக  தக்க வைத்துக்கொண்டு வந்திருக்கிறது. இத்தொகுதியில் மூன்று தவணை சட்டமன்ற உறுப்பினர் ஜசெகவின் லீ கீ ஹியோங் புற்றுநோய் காரணமாக கடந்த மார்ச் 21ஆம் தேதி காலமானார்.

மலேசியத் தேர்தல் ஆணையம் (எஸ்பிஆர்) வரும் மே 11ஆம் தேதி இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறது.

கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதியில் இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை 18 விழுக்காடு, மலாய்க்காரர்கள் 50 விழுக்காடு, சீனர்கள் 30 விழுக்காடு. சீன வாக்காளர்களைப் பொருத்தவரை அவர்களின் ஓட்டு ஜசெகவுக்கு என்பதில் சந்தேகமில்லை.

மலாய்க்காரர்களின் வாக்குகள் சிதறக்கூடிய வாய்ப்பு நிறையவே உள்ளது. இவர்களுள் பெரும்பான்மையோர்  எதிர்க்கட்சி கூட்டணி பெரிக்காத்தான் நேஷனல் பக்கம் திரும்பியிருக்கின்றனர். இந்நிலையில் 18 விழுக்காட்டு  இந்திய வாக்காளர்களின் 60 விழுக்காட்டு ஓட்டுகள் கிடைக்கப் பெற்றால் கோல குபு பாரு மீண்டும் ஜசெக வசமாகும்.

இது நடக்குமா? இது சாத்தியமா? என்ற கேள்விகள் தொகுதி முழுவதும் தற்போது பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.  இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

இந்தியர்கள் பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்டுள்ளனர். அவற்றுள் இரண்டு முக்கியமான விஷயங்களைப் பார்ப்போம்.

  1. மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவு (மித்ரா) கையாளப்பட்ட விதத்தில் ஏற்பட்ட கசப்பு உணர்வு இன்னும்  அவர்களிடையே நிலவுகிறது.
  1. மத்திய அரசாங்கத்தில் தமிழ் பேசும் ஓர் அமைச்சர் இல்லாததது அவர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது  இந்தியர்களின் ஓட்டுகள் இந்த இடைத்தேர்தலில் ஆட்சேப ஓட்டுகளாக பெரிக்காத்தான் நேஷனல் பக்கம் திரும்பும் என்பதையும்  நிராகரிப்பதற்கு இல்லை.

இச்சூழ்நிலையில் இந்தியர்களில் 60 விழுக்காடு ஓட்டுகள் ஜசெகவுக்கு கிடைக்கும்பட்சத்தில் இத்தொகுதியை அக்கட்சி தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளும். இது நிதர்சனம்.

கோலகுபுபாரு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஜசெக வேட்பாளர் வெற்றி பெறுவது இந்தியர்களில் கைகளில்தான் உள்ளது. இத்தொகுதியைப் பொறுத்தவரையில் இந்திய வாக்காளர்களே வெற்றி – தோல்வியை   நிர்ணயிக்கும் கிங்மேக்கர்ஸ் என்றால் மிகையாகாது.

அதேசமயத்தில் இந்த இடைத்தேர்தலில் குறைந்தபட்சம் 75 விழுக்காட்டு வாக்காளர்கள் வாக்களிக்க வந்தால் ஜசெகவில் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

2013ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில்  முதன்முறையாக களமிறங்கிய லீ கீ ஹியோங் மசீச வேட்பாளர் ஊய் ஹூய் வென்னை 1,702 வாக்குகள் பெரும்பான்மையில்  தோற்கடித்தார்.

2018 பொதுத்தேர்தலில் மசீசவின் வோங் கூன் முன் என்ற வேட்பாளரை 7,134 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்து 2ஆவது தவணையாக அவர் அத்தொகுதியை தக்க வைத்துக் கொண்டார்.

2023இல் ஆண்டு நடைபெற்ற சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில்  கெராக்கான் கட்சியின் வேட்பாளர் ஹென்ரி தியோவை 4,119 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்து தொகுதியை லீ தன் வசமாக்கினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version