Home Bahasa Malaysia கோல குபு பாரு இடைத்தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் யார்?

கோல குபு பாரு இடைத்தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் யார்?

பி.ஆர். ராஜன்

உலுசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் வரும் மே 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இத்தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வசம் இருந்தது. ஜசெக வேட்பாளரான லீ கீ ஹியோங் கடந்த மூன்று தவணைகளாக இத்தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தொடர்ச்சியாக வெற்றி பெற்றார்.

வரும் இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக யார் போட்டியிடுவது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இது தொடர்பாக தாம் இன்னும் யாரிடமும் விவாதிக்கவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இடைத் தேர்தல் குறித்து இதுவரை தாம் யாருடனும் கலந்து பேசவில்லை என்று இங்கு பண்டார் உத்தாமா பத்தாங் காலியிலுள்ள பள்ளிவாசலில் இன்று வௌ்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான அவர் குறிப்பிட்டார்.

பள்ளிவாசலில் நோன்புப் பெருநாள் விருந்துபசரிப்பும் நடத்தப்பட்டது. இதில் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, தொகுதி முக்கியத் தலைவர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

முன்னதாக உலுசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்தியபிரகாஷ் நடராஜன் டத்தோஸ்ரீ அன்வாரை வரவேற்றார்.

புற்றுநோய்க் காரணமாக லீ (வயது 58) கடந்த மார்ச் 21ஆம் தேதி காலமானார்.  சில ஆண்டுகளாகவே அவர் புற்றுநோயோடு போராட்டம் நடத்தி வந்தார்.

இதனிடையே, வரும் மே 11ஆம் தேதி இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்த தேர்தல் ஆணையம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி அதற்கான வேட்பு மனு சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்தது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version