Home Hot News 15 வருடங்களாக கண் தெரியவில்லையா?

15 வருடங்களாக கண் தெரியவில்லையா?

பி.ஆர். ராஜன்

ரவாங், கம்போங் முகமட் தாய்ப் என்ற கம்போங் ஸ்ரீதெராத்தாய்  ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்திற்கு எதிரில் ஆறு லோட் நிலத்தை ஒரு வங்காளதேசி 15ஆண்டுகளாக சொந்தம் கொண்டாடி வந்திருக்கிறார்.

இந்த சுதந்திரத்தை அவருக்குத் தந்தது யார்? அந்நிய நாட்டவருக்கு இவ்வளவு பெரிய சலுகையா? உலுசிலாங்கூர் நகராண்மைக்கழகம் இதனை இவ்வளவு காலம் கண்டுகொள்ளாமல் விட்டு வைத்தது ஏன்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம்  உலுசிலாங்கூர் நகராண்மைக்கழகம்  பதில் அளிக்குமா?

இந்த ஆறு லோட் நிலத்தில் அந்த வங்காளதேச ஆடவர் ஓர் உணவகக் கட்டடத்தை கட்டி எழுப்பத் தொடங்கியபோது ஆலய நிர்வாகம் அதற்கு ஆட்சேபம் தெரிவித்திருக்கிறது.

ஆலய நிர்வாகத்திற்கும் அந்த வங்காளதேச ஆடவருக்கும் இடையே இது தொடர்பில் ஒரு சுமுகமான பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தபோது இந்து மதத்திலிருந்து மதம் மாறி அந்த வங்காளதேசியைத் திருமணம் செய்து கொண்ட  ஒரு பெண்மணி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதால் சுமுகமான பேச்சுவார்த்தை தள்ளுமுல்லுவில் முடிந்திருக்கிறது.

‘இனிலா இந்தியா பாபி’ என்று அந்த மதம் மாறிய பெண் உதிர்த்த தடித்த வார்த்தைகளால்  அந்த சுமுக பேச்சுவார்த்தை முறிந்தது. இரு தரப்பும் போலீசில் புகார் செய்ய ஆலயச் செயலாளர் பாஸ்கரன் இரசனும் அந்த வங்காளதேசியும் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

ஆனால்,  இந்தக் களேபரத்திற்கு முக்கிய காரணமாக இருந்த அந்தப் பெண் கைது செய்யப்படவில்லை. அவர் மீது நீதிமன்ற வழக்கும் தொடுக்கப்படவில்லை. ஏன் என்பதற்குப் பதிலும் இல்லை.

உலுசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி பிகேஆர் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்தியபிரகாஷ் நடராஜன் உலுசிலாங்கூர் நகராண்மைக் கழக கவுன்சிலர்கள் ப. புவனேஸ்வரன் (தலைமைக் கொறடா),  முருகன் ஆகியோர் உடனடியாக தலையிட்டு இந்த விவகாரத்திற்குத் தீர்வு கண்டனர்.

சிலாங்கூர் மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு. உலுசிலாங்கூர் நகராண்மைக் கழகத் துணைத் தலைவர் அவாலுடினுடன் அங்கு வந்து நிலவரங்களை நேரில் கண்டறிந்து வங்காளதேசி இவ்விவகாரத்தில்  சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்டிருக்கிறார் என்று  அதிரடியாக அறிவித்தார்.

அதுமட்டுமன்றி, நீதிமன்ற உத்தரவைப் பெற்று இந்த 6 லோட் நிலத்தில் கட்டப்பட்டுவரும்  அந்நபரின் கடையை  இடித்துத் தரைமட்டமாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும்,  இந்த வங்காளதேசி இவ்வளவு தைரியமாக இந்த ஆறு லோட் நிலத்தை எப்படி கையகப்படுத்தினார்? யார் யார் இதன் பின்னணியில் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உலுசிலாங்கூர் நகராண்மைக் கழக துணைத் தலைவரை அவர் கேட்டுக் கொண்டார்.

இவ்விவகாரத்தில் வழக்குப் போடப்பட்டிருக்கிறது. அதேசமயம் ஆறு லோட் நிலத்தை வாங்குவது தொடர்பில் சட்ட ரீதியாக அனைத்தும் அணுகப்படும் என்று டாக்டர் சத்தியபிரகாஷ் தெரிவித்திருப்பது சமயத்திற்கும் இனத்திற்கும் ஓர் இன்னல் என்றால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கமாட்டோம் என்ற அவரின் நிலைப்பாட்டை பிரதிபலிப்பதாக உள்ளது.

வழக்கிலும் நிறைய முரண்பாடுகள் இருக்கின்றன. கிட்டத்தட்ட ஒருதலைப்பட்சமாக சில விவகாரங்கள் நடந்திருக்கின்றன. அனைத்தும் புத்திசாலித்தனமாகவும் சட்ட ரீதியாகவும் அணுகப்பட்டு முறையான தீர்வுக் காணப்படும் என்று டாக்டர் சத்தியபிரகாஷ் சூளுரைத்திருக்கிறார்.

அவருடைய நிதானமும் சமயோசித சிந்தனையும் இந்தப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையைத் தந்திருக்கிறது.

நாடு விட்டு நாடு வந்து இங்கு மலேசியப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை நடத்தும் வங்காளதேசிக்கு இத்தனை பெரிய சலுகையா? இது எப்படி வந்தது? யார் தந்தது? இதன் பின்னணியில் யார் யார் இருக்கின்றனர்? என்பது வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

புத்திசாலித்தனமாக யோசிக்கத் தவறியதால் நாம் பலவற்றை இழந்திருக்கிறோம். இப்போது இதையும் நாம் இழந்துவிடக்கூடாது. ஆர்ப்பாட்டம் இன்றி அமைதியான முறையில் சட்ட ரீதியில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதுதான் விவேகம்!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version