Home Top Story “ஊழியர் விரும்பியபடி பணி நேரத்தை தீர்மானிக்கலாம்” நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் அரசு உத்தரவு

“ஊழியர் விரும்பியபடி பணி நேரத்தை தீர்மானிக்கலாம்” நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் அரசு உத்தரவு

’பணியாளர்களின் பணிநேரம் சார்ந்த நெகிழ்வு கோரிக்கைகளை முறைப்படி பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு’ நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.

வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே பணியாற்றுவது, குறிப்பிட்ட தினங்களுக்கு வீட்டிலிருந்தே பணியாற்றுவது என்பவை உட்பட பணிநேரத்தில் நெகிழ்வைக் கோரும் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறுவனங்கள் முறைப்படி பரிசீலிக்க வேண்டும் என சிங்கப்பூர் அரசு இன்று உத்தரவு ஒன்றில் தெரிவித்துள்ளது.

இதன்படி மாற்றங்களுக்குரிய நெகிழ்வான வேலைநேர நடைமுறைகள் எதிர்வரும் டிசம்பர் 1 முதல் நடைமுறைக்கு வர இருக்கின்றன. இதற்கான புதிய வழிகாட்டுதல்கள் அடங்கிய உத்தரவினை சிங்கப்பூர் அரசு இன்று பிறப்பித்துள்ளது.

இந்த புதிய வழிகாட்டுதலை மனிதவள அமைச்சகம், தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் மற்றும் சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பு ஆகியவற்றால் நிறுவப்பட்ட, ’நியாயமான மற்றும் முற்போக்கான வேலைவாய்ப்பு நடைமுறைகளுக்கான முத்தரப்புக் கூட்டணி’ இன்று அறிவித்தது.

இந்த ஆண்டின் இறுதியில் சிங்கப்பூரில் நடைமுறைக்கு வரும் இந்த திட்டத்தின் மூலம், நெகிழ்வான பணி இடங்கள் போன்ற தங்களுக்கு வசதியான ஏற்பாடுகளைக் கோரவும் பணியாளர்களுக்கு உரிமை உண்டு. “குடும்பம் குழந்தைகளை தனியாளாய் பராமரிப்பவர்கள், பெண் ஊழியர்கள் மற்றும் மூத்த பணியாளர்கள் ஆகியோர் பணியிடத்தில் தங்குவது அல்லது வீட்டிலிருந்தே பணியாற்றுவது என முடிவெடுக்கும் போது, அவர்களுக்கு ஏற்ப நெகிழ்வான பணிச்சூழல் அமைவது பணியாளர் – நிறுவனம் என இருதரப்புக்கும் நன்மை சேர்க்கும்” என்று முத்தரப்பு பணிக்குழுவின் இணைத் தலைவர் இயோ வான் லிங் தெரிவித்துள்ளார்.

வழிகாட்டுதல் சட்டத்தால் செயல்படுத்தப்படாவிட்டாலும், சிங்கப்பூரில் உள்ள அனைத்து நிறுவனங்களும் ஊழியர்களுக்கு முறையான நெகிழ்வான பணி ஏற்பாட்டுக் கோரிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான செயல்முறையை அமைத்தாக வேண்டும். உற்பத்தித்திறன் கணிசமான அளவு மோசமடைதல், செலவில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு அல்லது வேலையின் தன்மையைக் கருத்தில் கொண்டு அது சாத்தியமற்றது உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பணியளர்களின் கோரிக்கையை முதலாளிகள் நிராகரிக்கலாம்.

ஆனால் நிறுவனத்தின் மரபுகளுக்கு எதிரானது அல்லது நிர்வாகம் அத்தகைய நெகிழ்வான பணி பாணிகளை நம்புவதில்லை என்ற அடிப்படையில் எல்லாம் பணியாளர்களின் கோரிக்கையை நிறுவனங்கள் நிராகரிக்க இயலாது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version