Home Hot News கல்வி அமைச்சின் உத்தரவாதம் ஆறுதல் தருகிறது

கல்வி அமைச்சின் உத்தரவாதம் ஆறுதல் தருகிறது

பி.ஆர். ராஜன்

நாடு முழுவதும் 3,038 பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் படிக்கின்றார்கள் என்ற நிலையில் இந்தப் பள்ளிகளில் ஒன்றுகூட மூடப்படமாட்டாது என்று கல்வி அமைச்சு உத்தரவாதம் அளித்திருப்பது நிம்மதியையும் மன ஆறுதலையும்  தருவதாக உள்ளது.

சம்பந்தப்பட்ட ஒவ்வொரு பள்ளியிலும் தலா 150 மாணவர்களுக்குக் குறைவாகவே உள்ளனர். இருந்தாலும் இப்பள்ளிகள்,  மாணவர்கள் நலன்களில் கல்வி அமைச்சு தொடர்ந்து அக்கறையும் அதீத கவனமும் செலுத்தி வரும் என்று அதன் துணை அமைச்சர் வோங் கா வோ கூறியிருக்கிறார்.இதில் அனைத்து மொழிப் பள்ளிகளும் உள்ளடங்கியிருக்கின்றன. மாணவர்கள் எண்ணிக்கைக் குறைவாக இருந்தாலும்  ஏற்றத்தாழ்வுகள், பாகுபாடுகள் ஏதுமின்றி சமச்சீரான வசதிகள் செய்து தரப்படும். நிதி ஒதுக்கீடுகள், மேம்பாட்டுப் பணிகள், தர உயர்வு திட்டங்கள் அனைத்தும் சமமாகவும் நியாயமாகவும் இருக்கும் என்று துணை அமைச்சர் கூறியிருப்பது பள்ளிகள் மீது அமைச்சு கொண்டிருக்கும் அக்கறையைக் காட்டுவதாக உள்ளது.

அதேசமயத்தில் இந்த மொத்த எண்ணிக்கையில் தமிழ்ப் பள்ளிகளும் அடங்கியிருக்கின்றன என்ற நிலையில்   அவற்றின் மேம்பாடுகளிலும்  மாணவர்களின் நலன்களிலும் கல்வி அமைச்சு அக்கறை காட்டும் என்று இந்திய சமுதாயம் பெரிதும் நம்புகிறது.

நாடு முழுமையிலும்  கிட்டத்தட்ட 530 தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. இவற்றுள்  150க்கும் குறைவான எண்ணிக்கையிலான  மாணவர்களைக் கொண்டிருக்கும்  பள்ளிகளின் எண்ணிக்கை 369. அதே சமயத்தில் 30க்கும் குறைவான மாணவர்கள் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை 127ஆகும்.

இந்தப் பள்ளிகளின் நலன்கள், மேலும் அவை தொடர்ந்து நிலைத்திருப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஆலோசனைகளையும் கல்வி அமைச்சு வழங்க வேண்டும்.

தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை சரிவுக்கு அவற்றிலுள்ள  அடிப்படை வசதிகளும்  தோற்றமும் ஒரு காரணமாக இருக்கின்றன.  இவற்றை எவ்வாறு சரி செய்வது என்பதை கல்வி அமைச்சு ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும். இதற்கான ஒரு பெருந்திட்டத்தை வகுக்க வேண்டும்.

புதிதாகக் கட்டப்படும் தமிழ்ப்பள்ளிகள்  அனைத்தும் மிக நவீனமாகவும் ஒரு கல்லூரி அந்தஸ்திலான தோற்றத்தையும் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை இயல்பாகவே அதிகரிக்கின்றன.

அனைத்து அடிப்படை வசதிகளையும் நவீன தொழில்நுட்பங்களையும் கொண்டிருக்கும் தமிழ்ப்பள்ளிகள் பெற்றோரின் கவனத்தை ஈர்ப்பதாகவும் உள்ளன. தங்களது பிள்ளைகளை இதுபோன்ற பள்ளிகளில் சேர்ப்பதில் அவர்கள் ஆர்வம் காட்டி வருவதையும்  காண முடிகிறது.

தோட்டப்புறங்களிலும் உட்பகுதிகளிலும்  உள்ள தமிழ்ப்பள்ளிகள் கட்டடத் தோற்றத்திலும் வசதிகளிலும்  மிகக் குறைவான தரத்திலேயே உள்ளன. தோட்டப் பள்ளிகள் பெரும்பாலும் உட்பகுதிகளில் இருப்பதால் சாலை வசதிகள்  மிக மோசமாக இருப்பதையும் சுட்டிக்காட்டத்தான் வேண்டியிருக்கிறது.

குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நடைமுறைகளையும் கல்வி அமைச்சு ஆய்வு செய்து வருவதாகவும் துணை அமைச்சர் கூறியிருக்கிறார்.

இந்த ஆய்வுகளில்  பள்ளிக் கட்டடத் தோற்றம்  கழிப்பறை உட்பட  அதன் அடிப்படை வசதிகள், கல்விப் போதனைக்கான அடிப்படை தேவைகள் ஆகியவற்றையும் கவனத்தில் எடுத்துக் கொள்வது ஆக்கப்பூர்வமான பலன்களைத் தரும் என்பதை நிராகரிப்பதற்கில்லை.

கல்வி அமைச்சு மேற்கொண்டிருக்கும் பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளை ஒன்றிணைப்பது வகுப்புகளை ஒருங்கிணைப்பது போன்றவையும் அடங்கும்.

எது எப்படி இருப்பினும்  இப்பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களின் பணி எவ்வகையிலும் பாதிக்கப்படக்கூடாது.  பள்ளிகளை ஒருங்கிணைத்து வகுப்பறைகளையும்  ஒருங்கிணைப்பது போன்ற நடவடிக்கைகளால் ஆசிரியர்களின் வேலைக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது என்பதற்கு கல்வி அமைச்சு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

மாணவர்கள் அறவே இல்லாமல் செயல்படும் பள்ளிகளை அப்படியே விட்டு விடாமல்  அருகிலுள்ள  பள்ளியோடு ஒன்றிணைப்பது வருங்காலத்தில் நல்ல பயனைத் தரும் என்பதும் நிதர்சனம்.

அதேவேளையில்  கிட்டத்தட்ட 43 விழுக்காட்டு இந்தியப் பெற்றோர் மற்ற மொழிப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்து வருகின்றனர்.

ஒன்றாம் ஆண்டில் தமிழ்ப்பள்ளிகளில் பதிந்த மாணவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் சீன, மலாய்ப் பள்ளிகளில் பதிந்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

இந்த 43 விழுக்காட்டுப் பெற்றோரை தமிழ்ப்பள்ளி பக்கம் ஈர்ப்பதற்குரிய திட்டங்களையும் கல்வி அமைச்சு தன்னுடைய ஆய்வில் எடுத்துக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

மேலும், தாய்மொழிப்பள்ளிகள் நாட்டில் தொடர்ந்து செயல்படுவதற்கு யாரும் தடையாக இருக்கக்கூடாது என்பதையும் கல்வி அமைச்சு உறுதி செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் கல்வி அமைச்சின் இதுவரையிலான நிலைப்பாடு பாராட்டுக்குரியது. இது தொடர வேண்டும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version