Home Top Story சுயம் என்று ஏதுமில்லை; எல்லாம் கூட்டியக்கம்; இளையராஜாவை சாடும் வைரமுத்து?

சுயம் என்று ஏதுமில்லை; எல்லாம் கூட்டியக்கம்; இளையராஜாவை சாடும் வைரமுத்து?

தனது பாடல்களுக்கு காப்புரிமை கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா தாக்கல் செய்த வழக்கில் உயர்நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்த நிலையில், ’சுயம் என்று ஏதுமில்லை, எல்லாம் கூட்டு இயக்கம் என வைரமுத்து கவிதை வெளியிட்டு இருப்பது சர்ச்சையைக் கிளப்பி, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது பாடல்களை ஒப்பந்தம் முடிவடைந்த பின்னரும் தொடர்ந்து ஒளிபரப்பு செய்து வருவதாக எக்கோ நிறுவனத்தின் மீது இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்தது. விசாரணையின் போது ஒரு பாடல் என்பது இசையமைப்பாளர் மட்டுமே உருவாக்குவது அல்ல, அது பாடலாசிரியர், பின்னணி பாடகர் என பல்வேறு தரப்பினரும் இணைந்து உருவாக்கும் ஒன்று. பாடல் வரிகள் இல்லாமல் எப்படி பாடல் உருவாக முடியும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இது பல்வேறு தரப்பிலும் விவாதங்களை உருவாக்கி இருந்தது. பாடலுக்கு பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் ஆகியோரும் உரிமை கோர முடியுமா என்ற கேள்வியை எழுப்பியிருந்தது.

முன்னதாக, இசையை உருவாக்குவதால், தான் கடவுளுக்கு நிகரானவன் என்ற கருத்து தொணிக்கும் வகையில் நீதிமன்றத்தில் இளையராஜா சார்பில் கூறியிருந்த கருத்துக்கள் சிலவும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்நிலையில் பாடலாசிரியர் வைரமுத்து, தனது எக்ஸ் தள பக்கத்தில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ’ மனிதா! நீ எழுப்பும் இசை உடலால் விளைவதா? உயிரால் விளைவதா? உடலால் எனில் உயிரை விட்டுவிடப்போமோ? உயிரால் எனில் உடலைச் சுட்டுவிடப்போமோ? உயிர் உந்தி எழாமல் உடல் சிந்திவிடாமல் இசையேது இசை? மொழியேது மொழி? சுயமென்று ஏதுமில்லை; எல்லாம் கூட்டியக்கம் பிறக்கும் பிள்ளை ஆணோ பெண்ணோ பெறுவது மட்டும் ஆணும் பெண்ணும்’ என்று பதிவிட்டுள்ளார்.

சுயமின்றி ஏதுமில்லை, எல்லாம் கூட்டு இயக்கம் என்று அவர் கூறியிருக்கும் கருத்து இளையராஜாவை நேரிடையாகவே விமர்சிப்பது போல் இருப்பதால், இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் அந்த பதிவில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version